2 மகன்களுடன் பெண்ைண கொன்ற கள்ளக்காதலனை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்
திருப்பூரில் 2 மகன்களுடன் பெண்ணை கொன்ற கள்ளக்காதலனை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.
அனுப்பர்பாளையம்
திருப்பூரில் 2 மகன்களுடன் பெண்ணை கொன்ற கள்ளக்காதலனை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.
3 பேர் கொலை
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் குடவாசல் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி முத்துமாரி (வயது 38). இவர்களுடைய மகன்கள் தரணிஷ் (9), நித்திஷ் (6). கணவரை விட்டு பிரிந்த முத்துமாரி தனது மகன்கள் மற்றும் கள்ளக்காதலன் குஜராத்தை சேர்ந்த கோபாலுடன் திருப்பூர் சேடர்பாளையம் மேட்டுவா தோட்டத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி இரவு முத்துமாரி, அவருடைய 2 மகன்கள் ஆகியோரை கள்ளக்காதலன் கோபால் கொடூரமாக கொன்று விட்டு தப்பி சென்றான். அதன்பின்னர் கொலையாளி கோபால் சைக்கிளில் தப்பி சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளியை தேடி வந்தனர்.
ஏற்கனவே சிறை தண்டனை பெற்றவர்
கோபால் ஏற்கனவே ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகள் சிறையில் இருந்தது தெரிய வந்துள்ளது. ஆனால் தற்போது அவர் வசித்து வந்த பகுதியில் பொதுமக்களுக்கு பெரிய அறிமுகம் இல்லாததால் அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? அவருடைய குடும்பம் எங்கு உள்ளது? என்பது பற்றி எதுவும் தெரியவில்லை. கோபால் செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவர் யார்? யாரிடம் பேசி உள்ளார் என்ற தகவலையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். ஆனாலும் கொலை நடந்து 7 நாட்கள் ஆகியும் கோபாலை பிடிப்பதற்கான முக்கிய ஆதாரங்கள் பெரிய அளவில் கிடைக்காததால் கோபாலை பிடிப்பதில் போலீசாார் திணறி வருகிறார்கள். அவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவராக இருப்பதால் அங்கு தப்பி சென்று விட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 3 பேரை படுகொலை செய்த கோபால் இதுவரை போலீசாரின் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருப்பது திருப்பூர் மாநகர போலீசாருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.