ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரிக்கு உள்துறை அமைச்சரின் பதக்கம்; கொலை வழக்கை சிறப்பாக நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்தவர்


ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரிக்கு உள்துறை அமைச்சரின் பதக்கம்; கொலை வழக்கை சிறப்பாக நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்தவர்
x

கொலை வழக்கை சிறப்பாக நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரிக்கு இந்த ஆண்டுக்கான உள்துறை அமைச்சரின் பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு

ஈரோடு

கொலை வழக்கை சிறப்பாக நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரிக்கு இந்த ஆண்டுக்கான உள்துறை அமைச்சரின் பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு

ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு வகித்து வருபவர் ஆ.கனகேஸ்வரி. ஈரோடு மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக இவர் உள்ளார்.

இவருக்கு மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கடந்த 2019-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பில் இருந்தார்.

கொலை வழக்கு

அப்போது ஒரு கொலை வழக்கு தொடர்பான புலன் விசாரணை மேற்கொண்டார். அந்த வழக்கின் விவரம் வருமாறு:-

திண்டிவனம் தாலுகா காவேரிப்பாக்கம் சுப்பராயன் வீதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 15-5-2019 அன்று ஏ.சி. எந்திரம் (ஏர்கண்டிசனர்) வெடித்து ராஜூ, அவரது மனைவி கலைச்செல்வி, இவர்களின் மகன் கவுதம் ஆகியோர் இறந்ததாக கோவர்த்தன் என்பவர் திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். புகார்தாரான கோவர்த்தன் இறந்து போன ராஜூ-கலைச்செல்வி தம்பதியரின் மகன் ஆவார். இந்த வழக்கை அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஆ.கனகேஸ்வரி புலன் விசாரணை அதிகாரியாக இருந்து விசாரணை நடத்தினார். விசாரணையின் போது சொத்துக்காக கோவர்த்தனும், அவரது மனைவி தீபாகாயத்திரி ஆகியோர் தந்தை, தாய், தம்பி ஆகியோரை கொலை செய்தது தெரியவந்தது.

இதுதொடர்பான வழக்கு சென்னை பூந்தமல்லி வெடிபொருள் மற்றும் வெடிகுண்டு வழக்குகளுக்கான கோர்ட்டில் நடந்தது. புலன்விசாரணை அதிகாரி ஆ.கனகேஸ்வரி, கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

தூக்குத்தண்டனை

இந்த வழக்கு விசாரணையின்போது குற்றவாளிகளுக்கு எதிராக சேர்க்கப்பட்டு இருந்த சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறினார்கள். சூழ்நிலை சாட்சியங்கள், தடயவியல் ஆதாரங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் சரியான திசையில் வழக்கு நடைபெறச்செய்தவர் ஆ.கனகேஸ்வரி.

இதனால் கோவர்த்தன், தீபாகாயத்திரி 2 பேரையும் கோர்ட்டு குற்றவாளிகள் என்று உறுதி செய்தது. அத்துடன் குற்றவாளிகள் சாகும்வரை தூக்கிலிடவேண்டும் என்ற மரண தண்டனை அளித்து கடந்த 26-10-2021 அன்று கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

உள்துறை அமைச்சரின் பதக்கம்

இவ்வாறு தடயங்கள் இல்லாத ஒரு சந்தேக மரண வழக்கை சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றவாளிகளுக்கு முறையான தண்டனை பெற்றுக்கொடுத்தற்காக மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆ.கனகேஸ்வரிக்கு இந்த (2022) ஆண்டுக்கான புலன்விசாரணையில் சிறந்தவர் என்ற மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் மற்றும் உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story