கஞ்சா விற்பனையை ஒழிக்க ஊராட்சிகள் அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்க நடவடிக்கை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.சுதாகர் தகவல்
கஞ்சா விற்பனையை ஒழிக்க ஊராட்சிகள் அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்க நடவடிக்கை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.சுதாகர் தகவல்
மேற்கு மண்டல மாவட்டங்களில் கஞ்சா விற்பனையை முழுமையாக ஒழிக்க கிராம ஊராட்சிகள் அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும் என்று தர்மபுரியில் போலீஸ் ஐ.ஜி. சுதாகர் கூறினார்.
போலீஸ் பயிற்சி
தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில் தற்காலிக போலீஸ் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு போலீஸ் பணிக்கு தேர்வு பெற்ற 219 பயிற்சி போலீசாருக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்த பயிற்சியின் நிறைவு விழா அணிவகுப்பு தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் கலந்து கொண்டு அணிவகுப்பை பார்வையிட்டார். துப்பாக்கி சுடுதல், கவாத்து பயிற்சி, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
கடினமான பணி
நிகழ்ச்சியில் போலீஸ் ஐ.ஜி.சுதாகர் பேசியதாவது:-
போலீஸ் பணி கடினமான பணி. போலீஸ் பணிக்கும் மற்ற துறைகளில் செய்யும் பணிக்கும் பெரும் வித்தியாசங்கள் உண்டு. மற்ற துறைகளில் விதிகளுக்கு உட்பட்டு பணி செய்தால் போதும். போலீஸ் பணியில் விதிகளை தெரிந்து வைத்திருப்பதோடு காலத்தின் போக்கையும் தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும். சமுதாயத்திற்கு என்ன தேவை என்பதையும் தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தவாறு பணியாற்ற வேண்டும்.
இப்போது பயிற்சி முடிந்து களப்பணிக்கு செல்லும் போலீசார் நேர்மை, துணிச்சல் ஆகியவற்றை பின்பற்றி மக்களுக்கு பாதுகாவலர்களாக இருக்க வேண்டும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை பின்பற்றி சிறந்த முறையில் பணியாற்றி காவல்துறைக்கு பெருமை சேர்க்க வேண்டும். அடுத்த கட்டங்களுக்கு முன்னேறி செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கண்காணிப்பு குழுக்கள்
இதைத் தொடர்ந்து போலீஸ் ஐ.ஜி. சுதாகர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தை கஞ்சா இல்லாத மாநிலமாக மாற்ற முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேற்கு மண்டலத்தில் கஞ்சாவை ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்கு மண்டலத்தில் உள்ள தர்மபுரி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க கிராம ஊராட்சிகள் அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. மேற்கு மண்டலம் கஞ்சா இல்லாத பகுதியாக மாற்றப்படும். தர்மபுரி மாவட்டத்தில் 10 நாட்களில் சந்துக்கடைகளில் மது விற்பனை முற்றிலும் தடுக்கப்படும். குட்கா கடத்தலை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தொப்பூர் பகுதியில் வாகனங்கள் மெதுவாக செல்வதால், குட்கா கடத்தல் வாகனங்கள் பிடிபடுகின்றன என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாமலை, இளங்கோ உள்பட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.