காவல்துறை அறிவிப்பு பதாகையில் தமிழ்மொழி புறக்கணிப்பு


காவல்துறை அறிவிப்பு பதாகையில் தமிழ்மொழி புறக்கணிப்பு

திருப்பூர்

தளி

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்ற மகாகவி பாரதியின் கூற்றுக்கிணங்க பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தனித் திறனுடன் உருவாகி, பழமை வாய்ந்த இலக்கிய மரபுகளை தாங்கி மற்ற மொழிகளின் உதவி இல்லாமல் தனித்து நின்று பிற மொழிகளுக்கு தாய் மொழியாக விளங்குவது தமிழ்மொழி. செம்மொழி அந்தஸ்து பெற்றதும் நம் தமிழ்மொழியே. நம்மை பிறருடன் இணைப்பதும் மொழியே. பிறமாநிலத்தவர் நம் மாநிலத்துக்கு வரும்போது பிற மொழிகளில் பதாகைகள் வைப்பது தவறில்லை. ஆனால் தாய்மொழியாம் தமிழ்மொழியை புறக்கணித்துவிட்டு பிறமொழிகளை மட்டும் பதாகைகளில் எழுதி வைப்பது நியாயம்தானா? அதை உணர்த்தும் விதமாக காவல்துறை சார்பில் உடுமலை அருகே முக்கோணம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பதாகையில் தமிழ் மொழி முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் எழுதப்பட்டு இருப்பது தமிழ் ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தமிழ் ஆர்வலர்கள் கூறியதாவது:-

ஆங்கிலம் மற்றும் இந்தியில் அறிவிப்பு பதாகை வைக்கத் தெரிந்த தமிழக காவல்துறை தமிழர்கள் பயன்பெறும் வகையில் தமிழ் மொழியில் பதாகை வைக்காமல் புறக்கணிப்பு செய்து உள்ளனர். இதனால் தமிழ் மொழி மட்டுமே எழுத படிக்க தெரிந்த பொதுமக்கள் அதன் மூலம் பயனடைய முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. எனவே பிற மொழிகளில் வைக்கப்பட்ட அறிவிப்பு பதாகையை அகற்றிவிட்டு தமிழ் மொழியுடன் கூடிய பதாகையை வைப்பதற்கு போலீசார் முன்வர வேண்டும். அத்துடன் இனிவரும் காலங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் வைக்கப்படும் பதாகைகள், விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகளில் தாய் மொழியாம் தமிழ் மொழிக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story