ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் வாகன சோதனை
தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ரேஷன் அரிசி கடத்தல்
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீஸ் ஐ.ஜி.காமினி உத்தரவுப்படி கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில் போலீசார் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தொடர்ச்சியாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் தொப்பூர் சுங்கச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனங்களை நிறுத்தி அவற்றில் ரேஷன் அரிசி மூட்டைகள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பது குறித்து சோதனை நடத்தினார்கள். இதேபோல் தர்மபுரி நகரம் மற்றும் மாவட்டஎல்லை பகுதிகளில் வாகன சோதனை நடத்தப்பட்டது.
கடும் நடவடிக்கை
இதைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது ரெயில் நிலையங்களுக்கு கொண்டு வரப்படும் பொருட்களில் ரேஷன் அரிசி மூட்டைகள் உள்ளதா? என கண்காணிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பாக கண்காணிப்பு பணி மற்றும் வாகன சோதனை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் தெரிவித்தனர்.