முத்துப்பேட்டையில் போலீஸ் குவிப்பு
முத்துப்பேட்டையில் போலீஸ் குவிப்பு
முத்துப்பேட்டையை அடுத்த கோவிலூர் மணல்மேட்டை சேர்ந்த அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் ராஜேஷ் கடந்த 2021-ம் ஆண்டு தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த அ.ம.மு.க. ஜெ.பேரவையின் முன்னாள் திருவாரூர் மாவட்ட செயலாளர் ஜெகன் உள்பட பலர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தனர். இந்தநிலையில் சென்னை முகப்பேர் பகுதியில் தங்கி ஜெகன் ரெட்டிபாளையம் சாலையில் மீன்கடை நடத்திவந்தார். நேற்று முன்தினம் அங்குவந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஜெகனை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி விட்டனர். சென்னையிலேயே நேற்று மாலை ஜெகன் இறுதி சடங்கு நடந்தது. இதன் எதிரொலியாக ஜெகனின் சொந்த ஊரான முத்துப்பேட்டையை அடுத்த கோவிலூரில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து திருவாரூர் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் மேற்பார்வையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.