போலீசார் கொடி அணிவகுப்பு


போலீசார் கொடி அணிவகுப்பு
x

போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது.

திருச்சி

பொன்மலைப்பட்டி:

திருச்சி மாநகரத்தில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நாளை(புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதனை பொதுமக்கள் பாதுகாப்புடனும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையிலும் கொண்டாடும் வகையில் திருச்சி மாநகர போலீசார் சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் அரியமங்கலத்தில் நடைபெற்ற கொடி அணிவகுப்பினை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி எஸ்.ஐ.டி. கல்லூரியிலிருந்து தொடங்கி வைத்து நடந்து சென்றார். இந்த கொடி அணிவகுப்பு காமராஜ் நகர், முத்துமாரியம்மன் கோவில், ராஜ வீதியில் உள்ள 22 தெருக்கள், ஜி.டி. நாயுடு தெரு வழியாக தஞ்சை மெயின் ரோட்டிற்கு வந்து ஆயில் மில் செக் போஸ்ட் வழியாக பிரகாஷ் மஹாலில் முடிவடைந்தது.

இதை தொடர்ந்து உறையூர் பகுதியில் நடைபெற்ற கொடி அணிவகுப்பு உறையூர் போலீஸ் நிலையத்தில் தொடங்கி பாண்டமங்கலம் அரசமரத்தடி, பணிக்கன் தெரு, நாடார் தெரு, டாக்கர் ரோடு, நாச்சியார் கோவில் சந்திப்பு வழியாக சென்று மீண்டும் உறையூர் போலீஸ் நிலையத்தில் முடிவடைந்தது. இதில் போலீஸ் துணை கமிஷனர், கூடுதல் துணை கமிஷனர், மாநகர ஆயுதப்படை, உதவி கமிஷனர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் திருச்சி மாநகரில் எந்தவித இடையூறு இல்லாமலும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமலும் அமைதியான முறையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் வகையில், விழா அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்கனவே குறிப்பிட்ட வழித்தடங்களில் வந்து காவிரியாற்றில் சிலைகளை கரைத்திட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story