கூடலூர், பந்தலூரில் போலீசார் கொடி அணிவகுப்பு


கூடலூர், பந்தலூரில் போலீசார் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 23 Sep 2023 7:30 PM GMT (Updated: 23 Sep 2023 7:31 PM GMT)

கூடலூர், பந்தலூரில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற உள்ளதால், அசம்பாவிதங்களை தடுக்க போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

நீலகிரி

கூடலூர்

கூடலூர், பந்தலூரில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற உள்ளதால், அசம்பாவிதங்களை தடுக்க போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

விநாயகர் சிலைகள் ஊர்வலம்

நாடு முழுவதும் கடந்த 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்கள் மற்றும் பொது இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது. அதன்படி கூடலூர், பந்தலூரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு மதியம் 12 மணிக்கு ஆற்றில் கரைக்கப்படுகிறது.

கூடலூர் தாலுகாவில் 88 விநாயகர் சிலைகளும், பந்தலூர் தாலுகாவில் 84 விநாயகர் சிலைகளும் என மொத்தம் 172 சிலைகள் கரைக்கப்பட உள்ளது. இதையொட்டி அனைத்து இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

போலீசார் கொடி அணிவகுப்பு

இந்த நிலையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறுவதையொட்டி கூடலூரில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசாரின் கொடி அணிவகுப்பு நேற்று மாலை 3 மணிக்கு நடைபெற்றது. இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுந்தரராஜன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செல்வராஜ், செந்தில்குமார் உள்பட அதிரடி படையினர் மற்றும் போலீசார் 200 பேர் கலந்து கொண்டனர்.

அணிவகுப்பானது கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கி ராஜகோபாலபுரம், பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் வழியாக சென்று கோழிக்கோடு சாலையை அடைந்தது. இதேபோன்று பந்தலூரிலும் போலீசாரின் கொடி அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.


Next Story