கல்வராயன்மலையில் போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு 4 பேரிடம் போலீசார் விசாரணை

கல்வராயன்மலையில் போலி மதுபான ஆலை கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த மாதம் விஷச்சாராயம் குடித்ததில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் மேற்பார்வையில் சரகம் முழுவதும் போலீசார் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்ட மதுவிலக்கு போலீசார், வடலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் வைத்திருந்தது போலி மது பாட்டில்கள் என்பது தெரியவந்தது.
ஆலை கண்டுபிடிப்பு
இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அடுத்த கல்வராயன்மலையில் போலி மதுபானம் தயாரித்து பாட்டிலில் அடைத்து விற்பனை செய்வதாகவும், அதை வாங்கி வந்து விற்பனை செய்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்பேரில் 4 தனிப்படை போலீசார் கல்வராயன்மலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கல்வராயன்மலையில் உள்ள நடுதொரடிப்பட்டு பகுதியில் போலி மதுபானம் தயார் செய்யும் ஆலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
3 பேரை பிடித்து விசாரணை
தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அதில் 20-க்கும் மேற்பட்ட அட்டை பெட்டிகளில் தயார் செய்யப்பட்ட 454 போலி மது பாட்டில்கள் இருந்தது. மேலும் மதுபானம் தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்கள், பாட்டில் மூடிகள், பல்வேறு மதுபான நிறுவனங்களின் பெயர்கள் அச்சிடப்பட்ட போலி லேபிள்கள், மதுபானம் தயாரிக்கும் எந்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் இருந்தன.
தொடா்ந்து அவற்றை பறிமுதல் செய்த கடலூர் தனிப்படை போலீசார், அதை கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து ஆலை நடத்தி வந்தது தொடர்பாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், கல்வராயன்மலையை சேர்ந்த ஒருவர் என 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.