பெண் குளித்தபோது வீடியோ எடுத்த விவகாரம்:தனியார் மருத்துவமனையில் போலீசார் விசாரணை


பெண் குளித்தபோது வீடியோ எடுத்த விவகாரம்:தனியார் மருத்துவமனையில் போலீசார் விசாரணை
x
சேலம்

சேலம்

பெண் குளித்தபோது வீடியோ எடுத்த விவகாரம் தொடர்பாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

பெண்ணுக்கு மிரட்டல்

சேலம் அருகே பெரிய வீராணம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். பின்னர் அவரை சிகிச்சைக்காக அவரது மனைவி சேலம் 2-வது அக்ரஹாரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். இதையடுத்து சிகிச்சை முடிந்து தொழிலாளி வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில், தொழிலாளியின் மனைவியின் செல்போன் எண்ணுக்கு மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, நீங்கள் மருத்துவமனையில் தங்கியிருந்தபோது அங்குள்ள குளியல் அறையில் குளித்தபோது செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ என்னிடம் உள்ளது. எனவே, நான் கூப்பிடும் இடத்திற்கு வர வேண்டும் எனவும், அப்படி இல்லையென்றால் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவேன் என்று மிரட்டல் விடுத்து இணைப்பை துண்டித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுபற்றி சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை

அதன்பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர். மேலும், போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா, உதவி கமிஷனர் வெங்கடேசன் ஆகியோர் சைபர் கிரைமிற்கு சென்று குறிப்பிட்ட செல்போன் எண் யாருடையது என்பது குறித்து ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதேசமயம், அந்த மர்ம நபர் யார்? உண்மையில் குளிப்பதை வீடியோ எடுத்து உள்ளாரா? அல்லது மிரட்டல் விடுக்கிறாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையில் அந்த பெண்ணின் கணவர் அனுமதிக்கப்பட்டிருந்த அறையின் பக்கத்து அறையில் தங்கியிருந்தவர்கள் யார்? என்பது குறித்து அந்த மருத்துவமனைக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story