கைதியின் மனைவிக்கு தொந்தரவு:வார்டரின் செல்போன் அழைப்புகள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை


கைதியின் மனைவிக்கு தொந்தரவு:வார்டரின் செல்போன் அழைப்புகள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை
x
சேலம்

சேலம், செப்.8-

கைதியின் மனைவிக்கு தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் வார்டரின் செல்போன் அழைப்புகள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.

சைபர் கிரைம் போலீசார் விசாரணை

நாமக்கல்லை சேர்ந்த ஒருவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை பார்க்க அவரது மனைவி சேலம் சிறைக்கு வந்த போது சிறையில் தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த 28 வயதுடைய வார்டர் ஒருவர் பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கி, வாட்ஸ்-அப் காலில் தொடர்பு கொண்டு அவருக்கு தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட வார்டர் செல்போன் எண் சேலம் சைபர் கிரைம் போலீசாருக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த ஆய்வு அறிக்கை நேற்று சேலம் மத்திய சிறைக்கு சைபர் கிரைம் போலீசார் அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது.

ஆய்வு

இது குறித்து சேலம் மத்திய சிறை சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் கூறியதாவது:-

சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்ட வார்டரின் செல்போன் எண்ணின் 6 மாதத்திற்கான ஆய்வு அறிக்கை இன்று (நேற்று) மாலை கிடைத்து உள்ளது. அதை வைத்து புகார் கூறப்பட்ட வார்டர் யாரிடம் செல்போனில் பேசி உள்ளார் என்று ஆய்வு நடத்தப்பட்டு வரப்படுகிறது. அதில் கைதி மனைவியின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட வார்டர் பணி இடைநீக்கம் செய்யப்படுவார். மேலும் புகார் கூறிய அந்த பெண்ணிடம் சேலம் சிறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். முதலில் சம்பந்தப்பட்ட வார்டர் வாட்ஸ்-அப் காலில் பேசியதாக கூறினார். பின்னர் இல்லை என்று மறுத்தார். அதன்படி அந்த பெண் மாறி, மாறி ேபசுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story