வாலிபர் மர்மசாவு; போலீஸ் விசாரணை
திருப்பத்தூர் அருகே வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்
திருப்பத்தூர் அருகே வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பிணமாக கிடந்தார்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள இடையமேலூரை சேர்ந்தவர் தினேஷ்குமார் என்ற ஜெட் (வயது 34). இவர் திருப்பத்தூரில் உள்ள பூக்கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று காலையில் தினேஷ்குமார் திருப்பத்தூரை அடுத்த திருக்கோஷ்டியூர் தேசிய நெடுஞ்சாலையில், சாலை ஓரமாக முகம் மற்றும் கை, கால்களிலும் தலையின் பின்புறத்திலும் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இது தொடர்பாக திருக்கோஷ்டியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் விசாரணை
இதை தொடர்ந்து தினேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அடையாளம் தெரியாத வாகனம் மோதி அவர் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் திருக்கோஷ்டியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி செல்லத்துரை மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ஆத்மநாபன் நேரில் சென்று விசாரித்தார். வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.