போலீசார் பொய் வழக்கு போடுகிறார்கள்
போலீசார் பொய் வழக்கு போடுகிறார்கள் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் புகார் மனு அளித்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் குப்பம் தாலுகா பிரம்மதேவர் சேனுலுவை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிராமம் தமிழக-ஆந்திர எல்லையை ஒட்டி உள்ளது. நாங்கள் ஆந்திர மாநிலத்தில் வாழ்ந்தாலும் தமிழகத்துக்கு அன்றாட தேவைக்கு வந்து செல்கின்றோம். எங்கள் மீது திம்மாம்பேட்டை போலீசார் பொய் வழக்கு போடுகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
திருப்பத்தூர் அருகே குரிசிலாப்பட்டு ஊராட்சி மன்ற உறுப்பினர் சண்முகம் அழுதுகொண்டே தனது புகார் மனு தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டிடம் தெரிவித்தார். அவரது புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு சூப்பிரண்டு உத்தரவிட்டார். சண்முகத்திற்கு குடிநீர் கொடுத்து அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். கூட்டத்தில் 70 மனுக்கள் பெறப்பட்டது.