கோவையில் 900 பேரை கண்காணிக்கும் போலீசார்


கோவையில் 900 பேரை கண்காணிக்கும் போலீசார்
x
தினத்தந்தி 4 Nov 2022 12:15 AM IST (Updated: 4 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கோவையில் 900 பேரை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

கோயம்புத்தூர்

கோவை

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கோவையில் 900 பேரை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

கார் வெடிப்பு

கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23-ந் தேதி நடைபெற்ற கார் வெடிப்பில் ஜமேஷா முபின் என்பவர் பலியானார். இந்த சம்பவத்தால் கோவை மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத்தொடர்ந்து போலீசார் விரைந்து செயல்பட்டு ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்து 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் கோவை நகர போலீசார் நேற்று முன்தினம் ஒரே நாளில் முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்த 18 பேரின் வீடுகளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இதில் ஒருவர் வீட்டில் இருந்து மட்டும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

900 பேர் பட்டியல்

இதைத்தொடர்ந்து கோவை மாவட்டம் முழுவதும் தடை செய்யப் பட்ட அமைப்புகளின் ஆதரவாளர்கள், அடிப்படைவாத அமைப்புக ளில் தீவிரமாக இயங்குபவர்கள், அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் என 900 பேரின் பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் அனைவரும் போலீசாரின் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டு உள்ளனர்.

மேலும் இந்த பட்டியலில் உள்ள நபர்களிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தவும், அவர்களின் வீடுகளை சோதனை நடத்தவும் போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இந்த பட்டியல் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

சமூக வலைத்தளங்கள் கண்காணிப்பு

இந்த நிலையில் கார் வெடிப்பு சம்பந்தமாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் வெளியிடப்பட்டு வருகிறது. மேலும் சிலர் இருதரப்பினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை பதிவிடுவதை தடுக்கவும் சைபர் கிரைம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். இதுதவிர சமூக வலைத்தளங்களில் மத அடிப்படைவாத கருத்துகளை பதிவிடுபவர்களை கண்காணித்தும் வருகின்றனர். தேவைப்பட்டால் அவர்களை அழைத்து விசாரிக்கவும் திட்டமிட்டு உள்ளனர்.

இதனிடையே போலீசார் மேற்கண்ட நபர்களிடம் விசாரணை நடத்த 25 கேள்விகளை தயார் செய்து உள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர், வேலை, மத ஈடுபாடு, அடிப்படைவாத கொள்கை, சமூக வலைத்தள கணக்கு, அதில் அவர் பதிவிட்டுள்ள கருத்துகள், வங்கி கணக்கு விவரம் உள்பட பல்வேறு கேள்விகள் தயார் செய்யப்பட்டு உள்ளது. இந்த கேள்விகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டு அதற்கான பதில்களை பதிவு செய்து வருகின்றனர்.


Next Story