'கிரிப்டோ' கரன்சியில் முதலீடு செய்யலாம் எனக்கூறி நகை பட்டறை உரிமையாளரிடம் ரூ.23 லட்சம் மோசடி-போலீஸ் ஏட்டு தலைமறைவு
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக கூறி நகை பட்டறை உரிமையாளரிடம் ரூ.23 லட்சம் மோசடி செய்த போலீஸ் ஏட்டு தலைமறைவாகி விட்டார். அவர் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
நகை பட்டறை உரிமையாளர்
சேலம் தாதகாபட்டி குமரன் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 41). இவர் செவ்வாய்பேட்டையில் நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்து உள்ளார். அதில் வேலூர் போதை பொருள் தடுப்பு பிரிவில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வரும் ஒருவர் எனது நண்பர் மூலம் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு அறிமுகமானார்.
பின்னர் கிரிப்டோ கரன்சியில் பணம் முதலீடு செய்தால் அதற்கு 2 மடங்கு பணம் கிடைக்கும் என்று அவர் என்னிடம் ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பி பல தவணைகளில் அவரிடம் ரூ.47 லட்சம் கொடுத்தேன். பணத்தை திரும்ப கேட்ட போது அவர் காலம் தாழ்த்தினார். அப்போது அவர் எனது பணத்தை மோசடி செய்தது தெரிந்தது.
தீவிர விசாரணை
தொடர்ந்து வற்புறுத்தலின் பேரில் ரூ.22 லட்சம் மட்டும் கொடுத்தார். மீதி ரூ.23 லட்சம் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் கேட்ட போது பணம் மோசடி செய்ததாக ஏட்டு மீது புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. அவர் குறித்து விசாரணை நடத்திய போது அவர் தலைமறைவாகி இருப்பது தெரிய வந்து உள்ளது. எனவே தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்று கூறினர்.