கடலூரில் பரபரப்பு சீர்திருத்த பள்ளியில் இருந்து 6 சிறுவர்கள் தப்பி ஓட்டம் 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்


கடலூரில் பரபரப்பு சீர்திருத்த பள்ளியில் இருந்து 6 சிறுவர்கள் தப்பி ஓட்டம் 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்
x
தினத்தந்தி 24 March 2023 12:15 AM IST (Updated: 24 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 6 சிறுவர்கள் தப்பி ஓடினர். இதில் 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

கடலூர்

கடலூர் எஸ்.என்.சாவடியில் சிறுவர் சீர்திருத்த பள்ளி(அரசு கூர்நோக்கு இல்லம்) செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு கைதான கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திருவண்ணாமலை, கடலூர், சிதம்பரம், திட்டக்குடி, கிள்ளை ஆகிய பகுதிகளை சேர்ந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய 6 சிறுவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு சீர்திருத்த பள்ளியில் உள்ள உள்கேட்டை திறந்துள்ளனர். பின்னர் அங்கு மதில் சுவர் ஓரம் இருந்த மா மரத்தில் ஏறி, வெளியே குதித்துள்ளனர். இதற்கிடையே சத்தம் கேட்டு அங்கு சென்ற காவலாளி, சிறுவர்கள் தப்பி சென்றதை பார்த்து கண்காணிப்பாளர் கணபதிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

2 பேர் பிடிபட்டனர்

உடனே கணபதி, சிறுவர்கள் தப்பி சென்றது குறித்து புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால்பாரி சங்கர் தலைமையிலான போலீசார் நகரில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கடலூர் கம்மியம்பேட்டை ரெயில்வே கேட் வழியாக நடந்து சென்ற 2 சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் 15 வயதான அவர்கள் இருவரும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பி ஓடியவர்கள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை போலீசார் மீண்டும் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலேயே அடைத்தனர். மேலும் தப்பி ஓடி தலைமறைவான மற்ற 4 சிறுவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story