போலி கூட்டுறவு வங்கியில் போலீஸ் அதிகாரி சோதனை
போலி கூட்டுறவு வங்கியில் கோவை குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார் சோதனை நடத்தினார்.
போலி கூட்டுறவு வங்கியில் கோவை குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார் சோதனை நடத்தினார்.
போலி சான்றிதழ்
சென்னை அம்பத்தூர் லேடான் தெருவில் ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி என்ற பெயரில் கடந்த ஒரு வருடமாக வங்கி ஒன்று இயங்கின. இந்த வங்கியின் கிளைகள் சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வந்தன.
ரிசர்வ் வங்கி அங்கீகாரம் வழங்கியது போன்று போலி சான்றிதழ் தயாரித்து வங்கியை தொடங்கி அதன் தலைவராக சந்திரபோஸ் என்பவர் செயல்பட்டார். இந்த வங்கி போலி என்றும், அதை தொடங்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரபோசை கைது செய்தனர்.
முக்கிய ஆவணங்கள்
இந்த நிலையில் கோவை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார் தலைமையில் போலீசார் நேற்று சேலம் வந்தனர். பின்னர் 5 ரோடு பகுதியில் இயங்கி வந்த போலி கூட்டுறவு வங்கியில் அதிரடியாக புகுந்தனர்.
தொடர்ந்து அங்கிருந்த ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அங்கிருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.