விழுப்புரத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை
சுதந்திர தின விழாவையொட்டி விழுப்புரத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்
சுதந்திர தின விழா
நாட்டின் 76-வது சுதந்திர தின விழா நாளை(செவ்வாய்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு விழுப்புரத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் பழனி கலந்துகொண்டு, தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார்.
பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். தொடர்ந்து சுதந்திர தின போராட்ட தியாகிகளை கவுரவித்து அவர்களை சிறப்பிக்கிறார். பின்னர் ஏழை, எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
அணிவகுப்பு ஒத்திகை
இவ்விழாவையொட்டி ஆண், பெண் போலீசார் தனித்தனியாக விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள போலீஸ் மைதானத்தில் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜோசப் தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு ஒத்திகையில் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.
இதேபோல் தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், இளம் செஞ்சிலுவை சங்கத்தினர், ஊர்க்காவல் படையினர், வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர் ஆகியோரும் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.