கோவை மாவட்டத்தில் போலீசார் அதிரடி சோதனை


கோவை மாவட்டத்தில் போலீசார் அதிரடி சோதனை
x

கோவை மாவட்டத்தில் ‘ஆபரேஷன் கந்துவட்டி 2.0’ திட்டத்தின் கீழ் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் ரூ.1¼ கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்

கோவை

கோவை மாவட்டத்தில் 'ஆபரேஷன் கந்துவட்டி 2.0' திட்டத்தின் கீழ் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் ரூ.1¼ கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

'ஆபரேஷன் கந்துவட்டி 2.0'

தமிழகம் முழுவதும் கந்துவட்டி வசூலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் மேற்பார்வையில் 6 துணை சூப்பிரண்டுகள், 17 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 17 தனிப்படையினர் 'ஆபரேஷன் கந்துவட்டி 2.0' திட்டத்தின் கீழ் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். கே.ஜி. சாவடி, மதுக்கரை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், காரமடை, சூலூர், உள்பட மாவட்டம் முழுவதும் 41 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. காலை 6 மணிமுதல் 11 மணி வரை நடைபெற்ற இந்த சோதனையில் கந்துவட்டிக்காக பலரிடம் எழுதி வாங்கி வைத்து இருந்த சொத்து பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆவணங்கள்

கே.ஜி.சாவடி பகுதியில் தொழில் அதிபர் நடராஜன் (வயது 62) வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ.1 கோடியே 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சொத்து பத்திரங்கள், புரோ நோட்டுகள் உள்ளிட்ட பல ஆவணங்கள் சிக்கின.

கோவை மாவட்டம் முழுவதும் கந்துவட்டி வசூலித்த நபர்களிடம் இருந்து மொத்தம் 379 சொத்து பத்திரங்கள், 3 பாஸ்போர்ட்டுகள், 127 காசோலை புத்தகங்கள், 48 ஏ.டி.எம். கார்டுகள், 18 வங்கி கணக்கு புத்தகங்கள், 54 கையெழுத்திட்ட வங்கி பத்திரங்கள், 211 வாகன ஆர்.சி. புத்தகங்கள், 35 பைனான்ஸ் புத்தகங்கள், 7 ஆதார் கார்டுகள் கைப்பற்றப்பட்டன. மேலும் ரூ.1 கோடியே 26 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

18 பேர் கைது

கந்து வட்டி வசூலில் ஈடுபட்ட செல்வி, நடராஜன், வேலுசாமி (68), பட்டை சவுந்தர்ராஜன், உதயகுமார் (55), இளங்கோ, சரவணன் (42), சுபாஷ் (34), பார் நாகராஜ் என்ற முத்துசாமி(34), மகேந்திரன் (55), திருச்சிற்றம்பலம் குமார் (50), சதீஷ்குமார் (44), மாணிக்கம் (44), ராமர் (55), மாடசாமி (54), செல்வராஜ் (64), ஜனார்த்தனன், ரமேஷ் மற்றும் மணியன் என்ற கிருஷ்ணசாமி ஆகிய 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் வேலுசாமி என்பவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை தவிர 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

சோதனை தொடரும்

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் கூறும்போது, கோவையில் கந்துவட்டி வசூலினால் பலரும் பாதிக்கப்பட்டு வருவதாக புகார் வந்தது. இதனால் அதிரடி சோதனை நடத்தப்பட்டு பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story