மேலும் 2 வீடுகளில் போலீசார் திடீர் சோதனை
மேலும் 2 வீடுகளில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
கார் வெடிப்பு சம்பவம்
கோவையில் கடந்த மாதம் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில், காரில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இது ெதாடர்பாக போலீசார் விசாரணை நடத்தி 6 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டு, அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த 19-ந் தேதி திருச்சியை அடுத்த இனாம்குளத்தூரில் ஆவாரங்காடு கந்தசாமி நகரில் உள்ள சர்புதீன்(வயது 25), இனாம்குளத்தூர் நடுத்தெருவில் உள்ள சாகுல் ஹமீது(25) ஆகியோரின் வீடுகள் மற்றும் சர்புதீனின் ஜெராக்ஸ் கடையுடன் கூடிய இணையதள சேவை மையத்தில் ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு பாரதிதாசன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஹார்டு டிஸ்க், மடிக்கணினி உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர்.
வீடுகளில் திடீர் சோதனை
இந்நிலையில் இனாம்குளத்தூர் வெல்கம் சிட்டியை சேர்ந்தவர் சவுக்கத் அலி(25). எலக்ட்ரீசியனான இவர் கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரின் செல்போன் பதிவை, தன்னுடைய செல்போனில் பதிவிட்டு உள்ளார். இதனால் சைபர் கிரைம் போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு முகமையினர் சந்தேகமடைந்தனர்.இதையடுத்து அவர்களின் அறிவுறுத்தலின்படி ராம்ஜிநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி, சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட போலீசார் சவுக்கத் அலி வீட்டில் நேற்று மாலை திடீரென சோதனை நடத்தினர். மேலும் அருகில் உள்ள அவருடைய அண்ணன் வீட்டிலும் சோதனை நடத்தினர்.
ஆவணங்கள்...
இந்த சோதனையின் முடிவில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். திடீரென அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, வீடுகளில் சோதனை நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.