டாஸ்மாக் கடைகள் அருகில் போலீசார் அதிரடி சோதனை

நெகமம், கிணத்துக்கடவில் டாஸ்மாக் கடைகள் அருகில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் மது விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெகமம்
நெகமம், கிணத்துக்கடவில் டாஸ்மாக் கடைகள் அருகில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் மது விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதிரடி சோதனை
கிணத்துக்கடவு, நெகமம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக அதிகாலையில் டாஸ்மாக் கடைகள் அருகில் மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்தது. இதையொட்டி நேற்று மேற்கண்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது கரப்பாடி பிரிவில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பின்புறம் அதிகாலை நேரத்தில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்த திருச்சி மணப்பாறையை சேர்ந்த தர்மராஜ்(வயது 33) என்பவரை நெகமம் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மது விற்பனை
மேலும் காட்டம்பட்டி டாஸ்மாக் கடைக்கு பின்புறம் அதிகாலையில் மது பாட்டில்களை விற்பனை செய்த ராமநாதபுரம் மாவட்டம் இருதயபுரத்தை சேர்ந்த முருகன்(33) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பனப்பட்டி டாஸ்மாக் கடைக்கு பின்புறம் உள்ள முட்புதரில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலை சேர்ந்த பாலசுப்பிரமணி(33) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வடசித்தூர் கிணத்துக்கடவு ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பின்புறம் அதிகாலையில் மதுபாட்டில்களை விற்பனை செய்த அறந்தாங்கியை சேர்ந்த கார்த்தி(27) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல்
இதேபோன்று கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் சிங்கையன்புதூர், சொலவம்பாளையம் ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றபோது சிங்கையன் புதூர் கல்லுக்குழி பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த சென்னை அம்பத்தூரை சேர்ந்த கணேசன்(வயது 37) என்பவரை கைது செய்தனர். அவரிடம் 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் சொலவம்பாளையம் ெரயில்வே கேட் அருகில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த அரசம்பாளையம் பகுதியை சேர்ந்த குணசேகரன்(24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.






