கையில் வாக்கிடாக்கி...! போலீஸ் என்று 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரம்...! காஞ்சிபுர வழக்கில் பகீர் தகவல்கள்..


கையில் வாக்கிடாக்கி...! போலீஸ் என்று 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரம்...!  காஞ்சிபுர வழக்கில் பகீர் தகவல்கள்..
x

கடந்த வருடத்தில் இருந்து இதுவரை, 11 பெண்களிடம் இதைப்போலவே பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

காஞ்சிபுரம்

சென்னை

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் இருங்காட்டுக்கோட்டை, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வல்லம், வடகால் ஆகிய பகுதிகளில் 5 தொழில் பூங்காக்கள் உள்ளன. இந்த தொழில் பூங்காக்களில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளில், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என லட்சக்கணக்கான பேர் தங்கி வேலைசெய்து வருகின்றனர். இந்தநிலையில், கடந்த டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வேலை பார்த்து வந்த பெண், இருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் தங்கி ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் , வேலை அந்த பெண் வேலைபார்த்து வந்துள்ளார். அவர் கடந்த டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி தனது ஆண் நண்பருடன் சென்று டிபன் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு நடந்து வந்துள்ளார். அப்பொழுது அவரைப் பின்தொடர்ந்து வந்த இரண்டு பேர், காக்கி பேண்ட் அணிந்துகொண்டு தங்களை போலீசார்போல், காட்டிக்கொண்டு விசாரிக்க வேண்டும் என அந்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே வடமங்கலம் செல்லும் சாலையில், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு, அந்த பெண்ணை அழைத்துச் சென்று இருவரும் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அந்த பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளனர்.

இது குறித்து அந்த பெண் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள காவலன் செயலியில் புகார் அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், ஸ்ரீபெரும்புதூர் எம்ஜிஆர் நகரில் இருந்து சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, வடமங்கலம் ஆகிய பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவுகளின் கீழ், ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் .

குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த நாகராஜ் (31) மற்றும் பிரகாஷ் (31) என்ற இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். கடந்த 5 நாட்களுக்கும் முன்பு கூட ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் இருவர் சுற்றி திரிந்தபொழுது அவர்களை கைது செய்ய காவல்துறையினர் முயற்சி செய்தபோது, தப்பி சென்றனர். தொடர்ந்து இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

சம்பந்தப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே, திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் காஞ்சிபுரம் பகுதியில் மட்டுமின்றி திருவள்ளூர் , அரக்கோணம், செய்யாறு, உள்ளிட்ட மாவட்டங்களில் குற்றச் செயலில் ஈடுபட்டதும், விசாரணையில் தெரிய வந்தது. போலீஸ் என்று சொல்லி பல பெண்களை விசாரணைக்கு அழைப்பதாக, கூறி பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளதும் தெரியவந்தது. அதே போல் இருவரும் சேர்ந்து கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு, காஞ்சிபுரம் பெரிய நகர் பகுதியை சேர்ந்த 23 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக புகார் உள்ளது.

இந்த நிலையில் தனிப்படை போலீசாருக்கு இருவரும் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்றபொழுது , தப்பியோட முயன்றபோது இருவரையும் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்துள்ளனர். இதில் நாகராஜுக்கு துப்பாக்கி பாய்ந்து காலில் காயம் ஏற்பட்டுள்ளது. தப்பிக்கும் முயற்சி செய்யும்போது போலீசாரை தாக்க முயற்சி செய்துள்ளனர். அப்பொழுது போலீசார் வானத்தை நோக்கி 2 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தி எச்சரிக்கை செய்தும் தப்பி ஓட முயற்சி செய்ததால், வேறு வழியின்றி 1 ரவுண்டு காலில் சுட்டு பிடித்தனர். உடன் இருந்த பிரகாஷ் தப்பிக்கும் பொழுது காலில் முறிவு ஏற்பட்டுள்ளது .

பாதிக்கப்பட்ட இருவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு இருவரும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து அரிவாள், கத்தி, வாக்கிடாக்கி, லத்தி, இருசக்கர வாகனங்கள், செல்போன்கள், நம்பர் பிளேட் கட்டர், மிளகாய்பொடி, சாவி, ரிவால்வர் ரவுண்ட்ஸ், ராடு, கையுறை மற்றும் முகமூடி ஆகியவை கைப்பற்றப்பட்டது.

குற்ற சம்பவங்களில் ஈடுபடும்பொழுது, தங்களை காவலர்கள்போல் காட்டிக் கொள்வதற்காக, ஆன்லைன் மூலம் வாக்கிடாக்கி வாங்கி உள்ளனர். இதன் மூலம் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.- இந்த சம்பவம் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

கடந்த வருடத்தில் இருந்து இதுவரை, 11 பெண்களிடம் இதைப்போலவே பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.


Next Story