பொதுக்கூட்ட மேடை அமைக்க போலீசார் அனுமதி மறுப்பு: அ.தி.மு.க.வினர் சாலை மறியல் செய்ய முயற்சி


பொதுக்கூட்ட மேடை அமைக்க போலீசார் அனுமதி மறுப்பு: அ.தி.மு.க.வினர் சாலை மறியல் செய்ய முயற்சி
x
தினத்தந்தி 20 Oct 2023 12:15 AM IST (Updated: 20 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொதுக்கூட்ட மேடை அமைக்க போலீசார் அனுமதிக்காததால், அ.தி.மு.க.வினர் சாலை மறியல் செய்ய முயன்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நேற்று மாலை அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதற்காக மேடை அமைக்கும் பணியில் நேற்று காலை அ.தி.மு.க.வினர் ஈடுபட்டனர். அவர்கள் நகராட்சி திடலின் மையப்பகுதியில் மேடை அமைக்காமல் அங்குள்ள மதில் சுவருக்கு வெளியே சாலையோரமாக அமைத்தனர்.

அப்போது அங்கு வந்த தாலுகா போலீசார், இங்கு மேடை அமைப்பதால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும், அவ்வாறு கூட்டம் அதிகமாக இருந்தால் போக்குவரத்துக்கு முற்றிலும் இடையூறு ஏற்படும், எனவே இங்கு மேடை அமைக்கக்கூடாது என்றும், நகராட்சி திடலுக்குள் சென்று மேடை அமைக்குமாறு கூறினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ் ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு விழுப்புரம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் விரைந்து வந்து அ.தி.மு.க.வினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது எக்காரணத்தை கொண்டும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்றும், அதற்கு தகுந்தாற்போல் மேடை அமைத்து கூட்டத்தை நடத்துங்கள் என்றுகூறி அனுமதியளித்தார். அதன் பிறகு அ.தி.மு.க.வினர், தங்கள் போராட்ட முடிவை கைவிட்டு நகராட்சி திடலின் மதில் சுவரை ஒட்டியவாறு மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


Next Story