பா.ஜனதா இருசக்கர வாகன பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு
கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட பா.ஜனதா இருசக்கர வாகன பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட பா.ஜனதா இருசக்கர வாகன பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பா.ஜனதா பேரணி
பா.ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி சார்பில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 8 ஆண்டு சாதனைகளை விளக்கி கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி நேற்று இருசக்கர வாகன பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று காலை கன்னியாகுமரியில் நான்கு வழிச்சாலை முடியும் பகுதியில் மாநில பா.ஜனதா இளைஞர் அணி தலைவர் ரமேஷ் சிவா தலைமையில் நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி, குமரி மாவட்ட பா.ஜனதா தலைவர் தர்மராஜ், மாவட்ட பொருளாதார பிரிவு தலைவர் சுபாஷ், கன்னியாகுமரி நகர தலைவர் கனகராஜ், மாவட்ட செயலாளர் ஜெகநாதன், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர்கள் முத்துராமன், மீனாதேவ் மற்றும் ஏராளமானோர் திரண்டனர்.
போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு
ஆனால் இருசக்கர வாகன பேரணிக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. மேலும் குமரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
பேரணிக்கு அனுமதி மறுத்ததால் போலீசாருடன் பா.ஜனதா கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி கிடையாது என்றும், அதே சமயத்தில் கார்களில் பேரணியாக செல்லலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து காந்தி மண்டபம் முன்பு இருந்து இளைஞர் அணியினர் கார்களில் பேரணியாக சென்னை நோக்கி புறப்பட்டனர். அவர்களை பா.ஜனதா நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர். முன்னதாக காந்தி மண்டபத்தில் உள்ள பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.