ராட்சத கிரேன் மூலம் வாகனங்களை அகற்றிய போலீசார்
ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலைய வளாகத்தில் குவிந்து கிடந்த வாகனங்கள் ராட்சத கிரேன் மூலம் அகற்றப்பட்டன.
திருட்டு, விபத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். அந்த வாகனங்களுக்கு உரிமைக்கோரி யாரும் வரவில்லை என்றால், அவை அரசுடைமையாக்கப்பட்டு பொது ஏலத்தில் விடப்படும். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் நிலையத்தில் குவிந்து கிடக்கும் வாகனங்களை ஏலம் விடுவதற்கு மாவட்ட போலீஸ் நிர்வாகம் முடிவு செய்தது.
இதனையடுத்து ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் உள்ள வாகனங்கள் அகற்றப்பட்டு, ஏலம் விடுவதற்காக திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அதன்படி ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலைய வளாகத்தில், கடந்த 2016-ம் ஆண்டு முதல் கேட்பாரற்று கிடந்த இரு சக்கர வாகனங்களும் ஆயுதப்படை மைதானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் முன்னிலையில் அந்த வாகனங்கள் ராட்சத கிரேன் மூலம் தூக்கி லாரிகளில் ஏற்றப்பட்டது. ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் இருந்து 120-க்கும் மேற்பட்ட வாகனங்கள், திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்திற்கு ஏலம் விடுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.