ஆழியார் தடுப்பணையில் போலீஸ் பாதுகாப்பு


ஆழியார் தடுப்பணையில் போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 13 Feb 2023 12:15 AM IST (Updated: 13 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுலா வந்த பிளஸ்-2 மாணவர் ஆழியாறு தடுப்பணையில் மூழ்கி பலியானார். ஆகவே, சுற்றுலா பயணிகள் செல்லாமல் இருக்க அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர்

ஆனைமலை,

சுற்றுலா வந்த பிளஸ்-2 மாணவர் ஆழியாறு தடுப்பணையில் மூழ்கி பலியானார். ஆகவே, சுற்றுலா பயணிகள் செல்லாமல் இருக்க அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆழியாறு தடுப்பணை

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஆழியார் அணை உள்ளது. இந்த அணையின் கீழ்ப்பகுதியில் ஆற்றின் குறுக்கே ஆழியார் தடுப்பணை உள்ளது. இங்கு சுழல் மற்றும் புதைமணல் உள்ளது. ஆற்றின் தன்மை அறியாமல் குளிக்க செல்பவர்கள் சிலர் சுழல், புதைமணலில் சிக்கி உயிரிழந்து உள்ளனர். இதனால் தடுப்பணைக்கு செல்ல சுற்றலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் அங்கு பொதுப்பணித்துறை மற்றும் போலீசார் சார்பில், எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்தநிலையில் ஆழியாற்றில் உள்ள குரங்கு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து இல்லை. இதனால் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட வில்லை. தற்போது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிரான இடத்துக்கு சென்று வருகிறார்கள். எச்சரிக்கை பலகையையும் பொருட்படுத்தாமல், நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் லோகசுதன் ஆழியார் தடுப்பணையில் இறங்கி குளித்ததுடன், ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

போலீஸ் பாதுகாப்பு

இந்தநிலையில் நேற்று வார விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ஆழியார் பகுதிக்கு சுற்றுலா வந்தனர். ஆழியார் தடுப்பணை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

ஆழியார் தடுப்பணையில் குளிக்கக்கூடாது என போலீசார் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. அதனை பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் தடுப்பணையில் குளிப்பது வேதனை அளிக்கிறது. அவர்கள் செல்வதை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இங்கு தடையை மீறி செல்லும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story