குமரியில் பா.ஜனதா நிர்வாகிகள் வீடுகளில் போலீஸ் பாதுகாப்பு


குமரியில் பா.ஜனதா நிர்வாகிகள் வீடுகளில் போலீஸ் பாதுகாப்பு
x

தொழில் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. பா.ஜனதா நிர்வாகிகள் வீடுகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்

தொழில் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. பா.ஜனதா நிர்வாகிகள் வீடுகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பெட்ரோல் குண்டு வீச்சு

தமிழகத்தில் கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பா.ஜனதா நிர்வாகிகள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது‌. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பா.ஜனதா முக்கிய நிர்வாகிகள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. குமரி மாவட்டத்திலும் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் பா.ஜனதா நிர்வாகிகளின் வீடுகளுக்கு அவ்வப்போது சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மண்டைக்காடு அருகே உள்ள கருமன்கூடல் பகுதியில் தொழில் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போலீசார் ரோந்து

இதைத் தொடர்ந்து குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். இதையடுத்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசாரின் வழக்கமான வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டது.

நாகர்கோவிலை பொறுத்த வரையில் வடசேரி, பார்வதிபுரம், கலெக்டர் அலுவலக சந்திப்பு, செட்டிகுளம் சந்திப்பு, சவேரியார் ஆலய சந்திப்பு உள்ளிட்ட சந்திப்புகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஒழுகினசேரியில் உள்ள பெரியார் சிலை, வேப்பமூடு காமராஜர் சிலை உள்பட நாகர்கோவில் நகரில் உள்ள முக்கிய தலைவர்கள் சிலைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. முக்கிய சாலைகளில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.

கடற்கரை கிராமங்கள்

மேலும் நாகர்கோவில் நாகராஜா கோவில், சுசீந்திரம் தானுமாலய சாமி கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் போலீஸ் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது. மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது. மாவட்ட முழுவதும் பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பா.ஜனதா நிர்வாகிகள் வீடு

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க பா.ஜனதா முக்கிய நிர்வாகிகளின் வீடுகளுக்கும், பா.ஜனதா அலுவலகத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு போட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். அதன்படி முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உள்ளிட்ட நிர்வாகிகள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story