பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
கடலூர் மாவட்டத்தில் பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியினர் காவி உடையுடன் கூடிய அம்பேத்கர் சுவரொட்டிகளை ஒட்டினர். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போட அறிவுறுத்தப்பட்டது. அதன்படி கடலூர் அண்ணா பாலம் அருகில் உள்ள பெரியார் சிலை, மஞ்சக்குப்பத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
107 அம்பேத்கர் சிலைகள்
இதேபோல் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, சேத்தியாத்தோப்பு, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது பற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள 107 அம்பேத்கர், 25 பெரியார் சிலைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார்.