கொலை வழக்குகளில் தேடப்பட்ட 2 பேரை போலீஸ் சுட்டு பிடித்தது


கொலை வழக்குகளில் தேடப்பட்ட 2 பேரை போலீஸ் சுட்டு பிடித்தது
x

தூத்துக்குடி, திருவாரூரில் நடந்த கொலைகளில் தொடர்புடைய 2 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றதால் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி சோரீஸ்புரத்தைச் சேர்ந்தவர் வக்கீல் முத்துக்குமார். இவர் கலெக்டர் அலுவலகம் அருகே அடகு கடையும் நடத்தி வந்தார்.

கடந்த மாதம் 22-ந் தேதி முத்துக்குமார் தனது அடகு கடை அருகே வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிப்காட் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கடந்த 2003-ம் ஆண்டு கோரம்பள்ளத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரின் அண்ணன் ஆத்திப்பழம் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் வக்கீல் முத்துக்குமாரின் தம்பி சிவக்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் சிவக்குமார் கடந்த 2019-ம் ஆண்டு தூத்துக்குடி கோர்ட்டு அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராஜேஷ் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ள ராஜேஷ் கடந்த 3 ஆண்டுகளாக ஜாமீனில் வெளிவர முயற்சி செய்து வருகிறார். ஆனால் முத்துக்குமார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து ஜாமீன் கிடைக்காமல் தடுத்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேசின் ஆதரவாளர்கள், முத்துக்குமாரை கொலை செய்தது தெரியவந்தது.

முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு

இதுதொடர்பாக முக்கிய குற்றவாளியான ராஜேசின் அண்ணன் ஜெயப்பிரகாஷ் (வயது 35) உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக 5 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். 5 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட சிலரை தனிப்படை போலீசார் வலைவீசி தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள தட்டப்பாறை காட்டுப்பகுதியில் மறைவான இடத்தில் ஜெயப்பிரகாஷ் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நேற்று அதிகாலையில் தனிப்படை போலீசார் காட்டுப்பகுதிக்கு சென்றனர். அங்கு பதுங்கி இருந்த ஜெயப்பிரகாசை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர்.

துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்

அப்போது, ஜெயப்பிரகாஷ் திடீரென்று தான் வைத்து இருந்த அரிவாளால் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, போலீஸ்காரர் சுடலைமணி ஆகியோரை வெட்டினார். இதில் அவர்களுக்கு இடது கைகளில் காயம் ஏற்பட்டது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தான் வைத்து இருந்த 9 எம்.எம். கைத்துப்பாக்கியால் ஜெயப்பிரகாசின் வலது முழங்காலுக்கு கீழே ஒரு முறை சுட்டு உள்ளார். இதில் அவரது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

இதையடுத்து உடனடியாக போலீசார், ஜெயப்பிரகாசை மடக்கி பிடித்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அதே போன்று ஜெயப்பிரகாஷ் அரிவாளால் வெட்டியதில் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, போலீஸ்காரர் சுடலைமணி ஆகியோரும் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

வளரும் தமிழகம் கட்சி பிரமுகர் கொலை

இதேபோல, திருவாரூர் மாவட்டத்தில் வளரும் தமிழகம் கட்சி பிரமுகரான பூவனூர் ராஜ்குமாரை கடந்த 10-ந் தேதி 8 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்த கொலையில் தொடர்புடைய 5 பேரை தனிப்படை போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர்.

இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட திருவாரூர் அழகிரி காலனி பகுதியை சேர்ந்த ரவி மகன் பிரவீன் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம், மனோரா அருகே பதுங்கி இருப்பதாக நேற்றுமுன்தினம் இரவு தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

துப்பாக்கியால் சுட்டார்

பிரவீன் பதுங்கி இருந்த இடத்தை கண்டுபிடித்த போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து போலீஸ் வாகனத்தில் ஏற்றமுயன்றனர். அப்போது பிரவீன் தான் மறைத்து வைத்திருந்த கொடுவாளால் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவை வெட்டிவிட்டு விட்டு தப்பி ஓட முயற்சித்தார். ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் மீண்டும் பிரவீனை பிடிக்க முயன்ற போது அவரை பிரவீன் மீண்டும் வெட்ட முயற்சித்தார். அப்போது தற்காப்பிற்காக இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தான் வைத்திருந்த துப்பாக்கியால் பிரவீனை நோக்கி சுட்டார்.

இதில் பிரவீனின் வலது காலில் காயம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்தார். பின்னர் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் பிரவீன் ஆகிய 2 பேரையும் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர். 2 பேரை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story