போலீஸ் நிலையத்தை திராவிடர் விடுதலை கழகத்தினர் முற்றுகை

பாணாவரம் போலீஸ் நிலையத்தை திராவிடர் விடுதலை கழகத்தினர் முற்றுகையிட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே உள்ள பெரப்பேரி கிராமத்தை சார்ந்தவர் தீலீபன். இவர் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவராக இருந்து வருகிறார். அதே கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவர் பொதுப்பாதையை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் தீலீபன் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு கடந்த 13-ந் தேதி கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் கோபமடைந்த அந்த பெண்ணின் ஆதரவாளர்கள் தீலீபனை வழக்கை வாபஸ் பெறுமாறு கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுக்கவே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதில் திராவிடர் விடுதலை கழக மாவட்ட தலைவர் தீலீபன் காயமடைந்து சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து பாணாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் தீலீபனை தாக்கியவர்களை கைது செய்யாததை கண்டித்து பாணாவம் போலீஸ் நிலையத்தை திராவிடர் விடுதலை கழகத்தின் முற்றுகையிட்டனர்.
இதனால் அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






