போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது
போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
திருவாரூர்:
போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
போலி பாஸ்போர்ட்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மண்டபம் அகதிகள் முகாமில் கியூ பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது இலங்கையை சேர்ந்த கஜன் என்பவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கூப்பாச்சிகோட்டை முகவரியில் வசிப்பதாக போலி ஆவணம் தயாரித்து கடந்த 2012-ம் ஆண்டு பாஸ்போர்ட் எடுத்தது தெரிய வந்தது.
இதனால் சந்தேகமடைந்த கியூ பிரிவு போலீசார் கஜனிடம் தீவிர விசாரணை நடத்தி இதில் தொடர்புடைய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
சிறை தண்டனை
இந்த வழக்கு விசாரணை திருவாரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய இந்திரஜித், ஈசன், பத்மநாபன் ஆகிய 3 பேரும் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டனர்.கடந்த மாதம் இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் ரவிச்சந்திரன், அசோக்குமார், மகாராஜன் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் ஆகிய 4 பேருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், திரைப்பட இயக்குனர் அசோகன், பிரபாகரன் ஆகிய இருவருக்கும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
மேல்முறையீடு
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்வதற்காக ஒரு மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் அவர்களது மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அரசு ஊழியர்கள் ரவிச்சந்திரன், அசோக்குமார், மகாராஜன் மற்றும் பிரபாகரன், அசோகன் ஆகிய 5 பேரும் திருவாரூர் கோர்ட்டில் ஆஜராகினர். நீதிமன்ற உத்தரவின்படி அவர்கள் 5 பேரையும் திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
நேற்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் கோர்ட்டில் ஆஜராகியதையடுத்து அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.