மாநில மனித உரிமை ஆணைய அலுவலகத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீக்குளிக்க முயற்சி


மாநில மனித உரிமை ஆணைய அலுவலகத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீக்குளிக்க முயற்சி
x

சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீக்குளிக்க முயன்றார்.

சென்னை,

திருவாரூர் மாவட்டம் வடூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் முருகானந்தம் (59).

இவர் 2015-ம் ஆண்டு பெருகவழந்தான் போலீஸ் நிலையத்தில் சிறப்பு தனிப்படையில் இடம் பெற்றிருந்தார். அப்போது, மணிகண்டன் என்ற விசாரணை கைதி இறந்துள்ளார்.

அதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் முருகானந்தத்திடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். அவர் இந்த வழக்கில் எனக்கு தொடர்பு இல்லை என்று கூறி வந்துள்ளார்.

தீக்குளிக்க முயற்சி

இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள மாநில மனித உரிமை ஆணைய அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக நேற்று காலை 11.15 மணியளவில் வந்தார். அப்போது அவர் திடீரென்று உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் முருகானந்தத்தை தீக்குளிக்கவிடாமல் தடுத்தனர். பின்னர் அவரை அபிராமபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவர் வைத்திருந்த மனுவை போலீசார் கைப்பற்றினர். அதில் அவர், 'குற்றவாளியாக மானம் இழந்து உயிர் வாழ்வதைவிட என் உயிரை மாய்த்துக்கொள்கிறேன். தவறான குற்றப்பத்திரிகையால் என் வாழ்விழந்து உயிர்நீக்கிறேன்' என்று தனது படத்துடன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் போன்று தகவல் எழுதி இருந்தார்.

சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் மீது புகார்

மேலும் அதில், 'என் இறப்புக்கு காரணம் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் ரஹமத்நிஷா. அவர் என்னை பழிவாங்குவதாக நினைத்து தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்' என்றும் எழுதி உள்ளார். அவருடைய மனு மாநில மனித உரிமை ஆணையத்தில் பெறப்பட்டுள்ளது.

முருகானந்தம் வருகிற 31-ந் தேதி பணியில் இருந்து ஓய்வுபெற உள்ளார்.


Next Story