சேலம் மாவட்டத்தில் 10 மையங்களில் நடந்தபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை 7,922 பேர் எழுதினர்அதிகாரிகள் ஆய்வு
சேலம்
சேலம் மாவட்டத்தில் 10 மையங்களில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை 7,922 பேர் கலந்து கொண்டு எழுதினர். தேர்வு மையங்களில் போலீஸ் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
போலீஸ் எழுத்து தேர்வு
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 621 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கும், தீயணைப்புத்துறையில் 129 நிலைய அதிகாரி பணியிடங்களுக்கும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் நேற்று எழுத்து தேர்வு நடைபெற்றது.
சேலம் மாநகரில் 3, புறநகரில் 7 என மாவட்டம் முழுவதும் 10 மையங்களில் போலீஸ் எழுத்து தேர்வு நேற்று நடந்தது. அதன்படி, ஜெயராம் கல்லூரி, ஏ.வி.எஸ். கல்லூரி, கணேஷ் கல்லூரி, செந்தில் பப்ளிக் பள்ளி, சிறுமலர் மேல்நிலைப்பள்ளி, சோனா கல்லூரி உள்ளிட்ட பல்வேறு மையங்களில் இந்த தேர்வு நடந்தது.
7,922 பேர் எழுதினர்
சேலம் புறநகரில் 7 ஆயிரத்து 175 பேரும், மாநகரில் 2 ஆயிரத்து 389 பேரும் என மொத்தம் 9 ஆயிரத்து 564 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் புறநகரில் 5 ஆயிரத்து 892 பேர் மட்டும் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 1,283 பேர் தேர்வு எழுத வரவில்லை.
அதேபோல், சேலம் மாநகரில் 2 ஆயிரத்து 30 பேர் மட்டும் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 359 பேர் தேர்வு எழுத வரவில்லை. மாவட்டம் முழுவதும் 10 மையங்களில் நடந்த போலீஸ் எழுத்து தேர்வை 7 ஆயிரத்து 922 பேர் எழுதினர்.
காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு மதியம் 1 மணி வரை நடைபெற்றது. முன்னதாக தேர்வு எழுத வந்த விண்ணப்பதாரர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வு மையங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
அதிகாரிகள் ஆய்வு
இதனிடையே, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வு நடைபெற்ற தேர்வு மையங்களில் சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். போலீஸ் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெறுகிறதா? என்றும், முறைகேடு இல்லாமல் தேர்வு நடைபெறுவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று தேர்வு பணியில் ஈடுபட்ட அலுவலர்களுக்கு அவர்கள் அறிவுறுத்தினர்.