6 வாலிபர்களிடம் போலீசார் ரகசிய விசாரணை


6 வாலிபர்களிடம் போலீசார் ரகசிய விசாரணை
x
தினத்தந்தி 11 May 2023 12:15 AM IST (Updated: 11 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சந்தேக தகவல் பரிமாற்ற தகவலின் அடிப்படையில் ராமநாதபுரத்தில் 6 வாலிபர்களிடம் போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமநாதபுரம்

சந்தேக தகவல் பரிமாற்ற தகவலின் அடிப்படையில் ராமநாதபுரத்தில் 6 வாலிபர்களிடம் போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

6 பேரிடம் ரகசிய விசாரணை

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சேர்ந்த சிலர் சந்தேகத்திற்குரிய வகையில் தகவல் தொடர்பில் இருப்பதாக உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. சம்பந்தப்பட்டவர்களின் தகவல் பரிமாற்றங்களை தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் நேற்று அனைவரையும் விசாரிக்க முடிவு செய்தனர். இதன்படி நேற்று ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் தேவிபட்டினம் பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள், ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் என 6 பேரை பிடித்தனர்.

அவர்களை போலீஸ் நிலையத்தில் வைத்து உள்ளூர் போலீசார் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு சிறப்பு பிரிவு போலீசார் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர். 6 பேரும் ஒருவருக்கொருவர் எந்தமாதிரியான ரகசிய உரையாடலில் ஈடுபட்டு வந்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரித்துள்ளனர்.

தொடர் கண்காணிப்பு

போலீசாரின் விசாரணையில் மேற்கண்ட வாலிபர்கள் சாதாரண செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி வந்ததும், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தேவிபட்டினம் பகுதியில் நேரில் சந்தித்து கலந்துரையாடி வந்ததும் தெரியவந்துள்ளது. அதுகுறித்தும், அதற்கான ஆதாரங்கள் குறித்தும் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறியதாவது:- சந்தேகத்தின் அடிப்படையில் சிலரை பிடித்து வந்து விசாரித்தோம். அவர்களிடம் சந்தேகத்திற்குரிய ஆதாரங்கள் உள்ளதா என்று ஆய்வு செய்து வருகிறோம். இதுவரை எந்தவிதமான ஆதாரங்களும் கிடைக்காததால் அவர்களை தேவைப்படும் போது விசாரணைக்கு வரவேண்டும் என்று கூறி அனுப்பி வைக்க உள்ளோம். இவ்வாறு கூறினார்.

சந்தேகத்திற்கு இடமான முறையில் ரகசிய உரையாடலில் ஈடுபட்டதாக வெளியான தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்ட 6 வாலிபர்களும் தொடர்ந்து போலீசாரின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story