அரசு பஸ் மோதி போலீஸ்காரர் பலி
ராசிபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது அரசு பஸ் மோதி போலீஸ்காரர் பலியானார்.
ராசிபுரம்:-
ராசிபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது அரசு பஸ் மோதி போலீஸ்காரர் பலியானார்.
போலீஸ்காரர்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆயில்பட்டி நடுக்காலனி பகுதியை சேர்ந்தவர் கந்தன். இவருடைய மகன் அய்யனார் (வயது 38). இவர், கடந்த சில ஆண்டுகளாக குன்னூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அய்யனார், நாமக்கல் மாவட்டத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.
கடந்த 7 நாட்களாக அய்யனார் விடுப்பில் இருந்தார். ராசிபுரம் அருகே அவரது சொந்த ஊரான ஆயில்பட்டிக்கு வந்திருந்த அய்யனார் நேற்று முன்தினம் இரவு ஆயில்பட்டியில் இருந்து நாமகிரிப்பேட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
பலி
மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் அருகில் சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பஸ், அய்யனார் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அய்யனார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யனார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை நடந்தது.
விபத்தில் இறந்த அய்யனாருக்கு கலைச்செல்வி (35) என்ற மனைவியும், நேதாஜி (15), சட்டர்ஜி (13) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
அணிவகுப்பு மரியாதை
விபத்தில் இறந்த போலீஸ்காரர் இன்று (புதன்கிழமை) நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியில் சேர இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் விபத்தில் இறந்தது அவரது குடும்பத்தினர், சக போலீசாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அய்யனாரின் உடல் அவரது சொந்த ஊரான ஆயில்பட்டியில் 12 குண்டுகள் முழங்க ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.