சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்


சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
x

தி.மு.க.அரசின் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து வீரபாண்டியில் நாளை (சனிக்கிழமை) அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பல்லடம் சட்டமன்ற தொகுதி எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

திருப்பூர்

தி.மு.க.அரசின் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து வீரபாண்டியில் நாளை (சனிக்கிழமை) அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பல்லடம் சட்டமன்ற தொகுதி எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையி்ல் கூறப்பட்டு இருப்பதாவது:-

சட்டம்-ஒழுங்கு

தி.மு.க. அரசு சொத்துவரி உயர்வு, விலைவாசி உயர்வு என அனைத்திற்கும் விலை உயர்வை ஏற்படுத்தி வருகின்றது. மின் கட்டண உயர்வு, பெரு தொழில்கள் வேறு மாநிலங்களுக்கு மாற்றமாகி செல்லும் நிலையிலும், அதற்கான தீர்வு காணப்படவில்லை.

மக்கள் பாதுகாப்பிற்கே அச்சம் ஏற்படும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய் இருக்கின்றது. தங்களுடைய வீட்டின் முன் மது குடித்ததை தட்டி கேட்ட பல்லடம் கள்ள கிணறு பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தினை சேர்ந்த 4 பேர் கொடூரமான முறையில் வெட்டி கொல்லப்பட்டுள்ளார்கள். அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அமலுக்கு வராத பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 7 வார்டுகளிலும் உடனே அமல்படுத்த வேண்டும். திருப்பூர் மாநகராட்சியின் மக்கள் பயணிக்க முடியாமல் பல மாதங்களாக சீர் செய்யாமல் இருக்கும் சாலைகளை உடனே அமைக்க வேண்டும். சீரான குடிநீரை மக்களுக்கு வழங்க வேண்டும் என மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க. அரசுக்கு எதிராகவும், மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களை கண்டித்தும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முன்னாள் முதல்-அமைச்சர், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பூர் வீரபாண்டி பிரிவில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.

ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்குகிறார். நான் முன்னிலை வகிக்கிறேன்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர பகுதி பேரூராட்சி வட்ட வார்டு கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், முன்னாள் ஊராட்சி செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்பு கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் செயல்வீரர்கள் வீராங்கனைகள், தொழில்துறையினர், நெசவாளர்கள், விவசாய பெருமக்கள், பொதுமக்கள் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story