தமிழகத்தில் தற்போது அரசியல் மாற்றம் கட்டாயம் தேவை - அண்ணாமலை பேச்சு


தமிழகத்தில் தற்போது அரசியல் மாற்றம் கட்டாயம் தேவை - அண்ணாமலை பேச்சு
x

தமிழகத்தில் தற்போது அரசியல் மாற்றம் கட்டாயம் தேவை என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:-

மத்திய பா.ஜனதா ஆட்சியால் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது. 9 ஆண்டுகளாக பா.ஜனதா என்ன செய்துள்ளது என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுள்ளார். 9 ஆண்டுகளாக மத்திய அரசின் திட்டங்கள் வாயிலாக இங்கு அமர்ந்துள்ளீர்கள். நீட் வந்த பிறகு ஏழை மாணவ, மாணவிகள் பலரும் அரசு கல்லூரிக்கு சென்றுள்ளார்கள். இதை பொறுக்க முடியாமல் தி.மு.க. நீட்டை எதிர்த்து வருகிறார்கள்.

பாஜக மக்களுக்கான அரசு. நாம் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளையும், 2 ஆண்டு கால தி.மு.க. அரசின் வேதனைகளையும் மக்களிடம் கூற வேண்டும். அமித்ஷா சென்னை வந்து சென்றது முதல் தி.மு.க.வினருக்கு காய்ச்சல் வந்து விட்டது. பாஜகவில் தான் தொண்டர் கூட உயர்ந்த பொறுப்புக்கு செல்ல முடியும் என அமித்ஷா கூறியுள்ளார். அவர் கூறியது முதல் தி.மு.க.வினர் என்னென்னவோ பேசி வருகிறார்கள். தி.மு.க.வில் உயர்ந்த பொறுப்புக்கு யாரும் போக முடியாது.

தமிழகத்தில் இன்று அரசியல் மாற்றம் கட்டாயம் தேவை. அதை பா.ஜனதா கட்டாயம் செய்யும். அதற்கான அடித்தளமாக தான் இந்த கூட்டம் உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் 40-க்கு 40 தொகுதிகளிலும் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்று, வெற்றியை மோடிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story