ம.பொ.சி. உருவப்படத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மலர்தூவி மரியாதை
ம.பொ.சி. 117-வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
ம.பொ.சி. பிறந்தநாள்
'சிலம்பு செல்வர்' ம.பொ.சி. என அழைக்கப்படும் ம.பொ.சிவஞானத்தின் 117-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை தியாகராயநகரில் உள்ள அவரது உருவச்சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிலைக்கு கீழே அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
ம.பொ.சி. உருவப்படத்துக்கு தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் ம.பொ.சி. மகள் மாதவி பாஸ்கரன், பேரன் செந்தில் ம.பொ.சி. ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
ம.பொ.சி. உருவப்படத்துக்கு எம்.எல்.ஏ.க்கள் வேலு, ஜெ.கருணாநிதி, பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் ஜெயசீலன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
அரசியல் தலைவர்கள் மரியாதை
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ம.பொ.சி. உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சியின் மாநில-மாவட்ட நிர்வாகிகள் பலரும் மரியாதை செலுத்தினர். சமத்துவ மக்கள் கழகம் சார்பில் நிர்வாகிகள் கண்ணன், தங்கமுத்து, விநாயகமூர்த்தி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையில் ஆர்.சிவகுமார், ஜி.சந்தானம், எம்.வைகுண்டராஜா, ஜி.ராபர்ட் உள்பட நிர்வாகிகள், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார் தலைமையில் வீரக்குமார், பொன்ராஜ், சசிகுமார், வேல்குமார், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் மின்னல் எச்.ஸ்டீபன், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் தேசிய தலைவர் பா.இசக்கிமுத்து உள்பட பலரும் மரியாதை செலுத்தினர்.