தாமிரபரணி ஆற்றில் அரசியல் கட்சியினர் மலர்தூவி அஞ்சலி


தாமிரபரணி ஆற்றில் அரசியல் கட்சியினர் மலர்தூவி அஞ்சலி
x

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நினைவு தினத்தையொட்டி, நெல்லை தாமிரபரணி ஆற்றில் அரசியல் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

திருநெல்வேலி

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நினைவு தினத்தையொட்டி, நெல்லை தாமிரபரணி ஆற்றில் அரசியல் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

17 பேர் உயிர் இழப்பு

நெல்லையில் கடந்த 1999-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ந்தேதி மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டு, நெல்லை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக ஊர்வலமாக சென்றனர்.

அப்போது போலீசாரின் தடியடியால் மக்கள் சிதறி ஓடினார்கள். இதில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கியும், போலீசாரின் தடியடியாலும் 17 போராளிகள் பலியானார்கள். அதன் 24-வது ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப் பட்டது.

இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் நெல்லை தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ., ரூபி.மனோகரன் எம்.எல்.ஏ., இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் விச்சு லெனின் பிரசாத் உள்ளிட்டோர் தாமிரபரணி ஆற்றில் மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

பொதுக்குழு உறுப்பினர்கள், வக்கீல் காமராஜ், மண்டல தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

த.மா.கா.-பா.ஜனதா

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நெல்லை மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன், அருண் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

பாரதீய ஜனதா கட்சி சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமையில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட தலைவர் மகாராஜன் உள்ளிட்டோர் தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

இதில் பொதுச்செயலாளர்கள் வேல் ஆறுமுகம், டி.வி.சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறுகையில், ''மணிப்பூர் சம்பவம் வருத்தம் அளிக்கும் சம்பவம் ஆகும். மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் நினைவாக நினைவு தூண் அமைக்குமாறு தமிழக அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் பா.ஜனதா சார்பில் நினைவுத்தூண் அமைக்கப்படும்'' என்றார்.

கம்யூனிஸ்டுகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நெல்லை மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் தலைமையில் அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நெல்லை மாவட்ட செயலாளர் லட்சுமணன் தலைமையில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க தலைவர் காசி விசுவநாதன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி சார்பில் மாநில குழு உறுப்பினர் ரமேஷ், மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

த.ம.மு.க.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் துணை பொதுச்செயலாளர்கள் நெல்லையப்பன், சண்முக சுதாகர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இதில் மாநகர செலாளர் துரை பாண்டியன், மகளிர் அணி நளினி சாந்தகுமாரி உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம்

மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சத்யா தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

பகுஜன் சமாஜ்

பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாநில செயலாளர் தேவேந்திரன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். தமிழர் உரிமை மீட்பு களம் சார்பில் லெனின் கென்னடி தலைமையில் அஞ்சலி செலுத்தினார்கள். இதில் நிர்வாகிகள் கணேசபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. புரட்சி பாரதம் அமைப்பு சார்பில் நெல்சன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழர் விடுதலை களம்

தமிழர் விடுதலை களம் நிறுவன தலைவர் வக்கீல் ராஜ்குமார் தலைமையில் தாமிரபரணி ஆற்றில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். இதில் மாவட்ட செயலாளர் முத்துக்குமார், மாநகர செயலாளர் வண்ணை முருகன், வக்கீல் பிரபுஜீவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்து மக்கள் கட்சி

இந்து மக்கள் கட்சி சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமையில், பலர் கலந்து கொண்டு தாமிரபரணி ஆற்றில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

இதே போல் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்தினார்கள்.


Next Story