அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவிநீக்கம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில், அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவிநீக்கம் செய்யக்கோரி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறையில், அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவிநீக்கம் செய்யக்கோரி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சா் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாரதி தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் அணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சக்தி, தெற்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் செந்தமிழன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பவுன்ராஜ் பேசினார்.
கோஷம் எழுப்பினர்
ஆர்ப்பாட்டத்தில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும். சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் மணக்குடி சங்கர், ஒன்றிய செயலாளர்கள் ஏ.கே.சந்திரசேகரன், ஜனார்த்தனன், இளங்கோவன், மகேந்திரவர்மன், நற்குணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் நாஞ்சில் கார்த்திக் நன்றி கூறினார்.