ரூ.6¼ கோடியில் பொலிவு பெறும் பொள்ளாச்சி ரெயில் நிலையம்


ரூ.6¼ கோடியில் பொலிவு பெறும் பொள்ளாச்சி ரெயில் நிலையம்
x
தினத்தந்தி 14 July 2023 12:45 AM IST (Updated: 14 July 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி ரெயில் நிலையத்தை ரூ.6 கோடியே 33 லட்சம் செலவில் மேம்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளன.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி ரெயில் நிலையத்தை ரூ.6 கோடியே 33 லட்சம் செலவில் மேம்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளன.

ரெயில் நிலையத்தை மேம்படுத்துதல்

பொள்ளாச்சியில் கடந்த 1915-ம் ஆண்டு ரெயில் நிலையம் தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 2009-ம் ஆண்டு மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகற்றி, அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்து கடந்த 2015-ம் ஆண்டு முதல் ரெயில் போக்குவரத்து பொள்ளாச்சி வழித்தடத்தில் நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சி ரெயில் நிலையம் தொடங்கி நூற்றாண்டை கடந்தும் ரெயில் நிலையத்தில் எந்தவித வசதிகளும் மேம்படுத்தவில்லை என்று புகார் எழுந்தது.

இந்த நிலையில் தற்போது அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரெயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளன. இதற்காக ரெயில் நிலைய வளாகத்தில் இருந்த பழைய கட்டிடங்கள் அகற்றப்பட்டு, அங்கு கிடந்த குப்பைகள், மீட்டர் கேஜ் பாதையின் போது பயன்படுத்திய தண்டவாளங்கள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணி நடந்து வருகிறது. மேலும் ரெயில் நிலைய கட்டிடம் இடிக்கப்பட்டு புதிதாக நவீன முறையில் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்காக மேற்கூரைகள் பிரித்தெடுக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

ஒராண்டிற்குள் முடிக்க திட்டம்

மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட ரெயில்வே சந்திப்பு அல்லது ரெயில் நிலையங்களை தொலைநோக்கு பார்வையில் மேம்படுத்துதல் ஆகும். குறிப்பாக பயணிகளுக்கான இருக்கைகள், காத்திருப்பு அறைகள், கழிவறை வசதிகள், மேற்கூரைகள், சுத்தமான குடிநீர் வினியோகம், குளிரூட்டப்பட்ட பயணிகள் காத்திருப்பு அறை, ரெயில் வருகை மற்றும் புறப்பாடு குறித்த டிஜிட்டல் திரைகள் அமைக்கப்படுகின்றன. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளும் இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 1275 ரெயில் நிலையங்கள் நவீன மயமாக்கி மேம்படுத்தப்படுகிறது. இதில் தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட 6 ரெயில்வே கோட்டங்களில் தலா 15 ரெயில்நிலைய சந்திப்புகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. பணிகளை தொடங்கி ஒராண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் மறு சீரமைத்தல் பணிக்கு ரூ.6 கோடியே 33 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தற்போது பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, ரெயில் நிலைய நடைமேடை மேற்கூரைகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


கேரள கட்டிட கலையை போன்று கட்டுவதாக புகார்

பொள்ளாச்சி ரெயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளன. இதற்கிடையில் பொள்ளாச்சி ரெயில் நிலைய கட்டிடத்தின் மாதிரி வரைபடம் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த கட்டிடம் கேரள கட்டிட கலையை பிரதிபலிக்கும் வகையில் கட்டுவதாக புகார் எழுந்து உள்ளது. இதுகுறித்து பொள்ளாச்சி ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கூறியதாவது:-

பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் கட்டப்படும் புதிய கட்டிடம் கேரள கட்டிட கலையை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. இதே போன்று கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் சொரனூர் ரெயில் நிலையம் கட்டப்பட்டு உள்ளது. இதுகுறித்து படத்துடன் டிவிட்டரில் தென்னக ரெயில்வேக்கு புகார் அனுப்பப்பட்டது. அதற்கு கேரளா கட்டிட கலையை போன்று கட்டவில்லை என்று பதில் அளித்தது. இதை தொடர்ந்து சொரனூர் ரெயில் நிலையத்தின் மாதிரி படத்துடன் மீண்டும் புகார் அனுப்பப்பட்டது. பொள்ளாச்சியில் பராம்பரிய கலாசாரத்தை குறிக்கும் வகையில் மாசாணியம்மன், சூலக்கல் மாரியம்மன், பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய கோவில்களின் ஏதாவது ஒரு கோவில் கோபுரத்தை போன்று பொள்ளாச்சி ரெயில் நிலையத்தின் முகப்பு கட்டிடத்தை வடிவமைக்க வேண்டும் என்று புகைப்படங்களுடன் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு தென்னக ரெயில்வே தரப்பில் இதுவரை எந்த பதிலும் இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story