பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு


பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில்  சமூக பாதுகாப்பு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு
x

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வடக்கு ஒன்றிய சமூக நலத்துறை அலுவலர்கள் நிவேதா, செல்வி, ஷோபனா ஆகியோர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்கள். மேலும் சமூக பாதுகாப்பு துறையில் உள்ள திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதுகுறித்து சமூக பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சமூக பாதுகாப்பு துறை மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால் அதை யாரும் பயன்படுத்துவதில்லை. இந்த நிலையில் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் திருமண உதவித்தொகை திட்டத்தில் விதவை மகள் திருமண நிதி உதவி, கலப்பு திருமணம், ஆதரவற்ற பெண்கள் நிதி உதவி, விதவை மறுமண நிதி உதவி ஆகிய திட்டங்கள் உள்ளன. 10 மற்றும் 12-ம் வகுப்பு படித்து இருந்தால் ரூ.25 ஆயிரம், ஒரு பவுன் தங்கம், பட்டப்படிப்பு படித்து இருந்தால் ரூ.50 ஆயிரம் ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு கல்வி உதவித்திட்டத்தில் தமிழ் வழி கல்வியில் படித்து கல்லூரி படிப்பு சேருபவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

பெண்களுக்கு ஆலோசனை மையம்

முதல்-அமைச்சரின் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் இரு குழந்தைகள் பிறந்து, 2-வது குழந்தைக்கு 3 வயதிக்குள் இருக்க வேண்டும். குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்து இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்கவும், ஆண் வாரிசு இல்லை என்கிற சான்று, இருப்பிட சான்று உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தில் ரூ.25 ஆயிரம் அந்த பெண்ணின் பெயரில் டெபாசிட் செய்யப்படும்.

அந்த பெண் 18 வயது பூர்த்தி அடையும் வரை அந்த தொகையை எடுக்க முடியாது. அதன்பிறகு முதிர்வு தொகையுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். மத்திய அரசின் திட்டமான ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மையம் கோவையில் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தில் பாலியல் ரீதியான பிரச்சினைகள், குடும்ப வன்முறை போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும் 181 எண்ணை தொடர்பு கொண்டு பெண்கள் புகார் தெரிவிக்கலாம். குழந்தைகள் பாதுகாப்பு மையம் 1098-க்கு தொடர்பு கொண்டு சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சினை, குழந்தை திருமணம் உள்ளிட்ட புகார்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story