தேசிய ஆணழகன் போட்டியில் பொள்ளாச்சி வாலிபர் சாதனை


தேசிய ஆணழகன் போட்டியில் பொள்ளாச்சி வாலிபர் சாதனை
x

பொள்ளாச்சியை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி வாலிபர் தேசிய ஆணழகன் போட்டியில் சாதனை படைத்தார். அவர் அரசு உதவிக்கரம் நீட்டுமா? எதிர்பார்த்து உள்ளார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி வாலிபர் தேசிய ஆணழகன் போட்டியில் சாதனை படைத்தார். அவர் அரசு உதவிக்கரம் நீட்டுமா? எதிர்பார்த்து உள்ளார்.

ஆணழகன் போட்டி

பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி செல்லமுத்து நகரை சேர்ந்தவர் உமர் பாருக்(வயது 67). காய்கறி வியாபாரி. இவருடைய மனைவி முகமதா(47). இவர்களுக்குகு ஆசாத் சுலைமான் (24), முகமது சபீர் அலி (23) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் வாய் பேச முடியாத மற்றும் காது கேட்கும் திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகள் ஆவர்.

முகமது சபீர் அலி, 12-ம் வகுப்பு வரை படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். 10-ம் வகுப்பு வரை படித்து உள்ள ஆசாத் சுலைமானுக்கு உடற்பயிற்சி செய்வதில் சிறு வயதில் இருந்தே ஆர்வம் அதிகம். தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டதன் பயனாக மாவட்ட ஆணழகன் போட்டி, மாநில ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தார். மேலும் டெல்லியில் நடந்த தேசிய ஆணழகன் போட்டியில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தார். அவருக்கு ஜமீன் ஊத்துக்குளியில் பொதுமக்கள் பாராட்டு விழா நடத்தினார்கள். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ஆசாத் சுலைமான், தனக்கு அரசு உதவிக்கரம் நீட்டுமா என்று எதிர்பார்த்து உள்ளார்.

உடற்பயிற்சி கூடம்

இதுகுறித்து அவரது தந்தை உமர் பாருக் கூறியதாவது:-

எனது மகன் ஆசாத் சுலைமான், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல தொடங்கினார். இதுவரைக்கும் 50-க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். தற்போது தேசிய போட்டியில் வெற்றி பெற்று பெருமை சேர்த்துள்ளார். நாங்கள் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறோம். எனது வருமானத்தை கொண்டுதான் குடும்பத்தை நடத்தி வருகிறோம். அவனது உடற்பயிற்சி செலவிற்கு மட்டும் மாதம் ரூ.25 ஆயிரம் வரை செலவாகிறது. இருந்தாலும் அவனுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து கொடுக்கிறோம். பச்சை காய்கறிகளைதான் அதிகம் சாப்பிடுவான். மீன் உள்ளிட்ட இறைச்சி வகைகளை எண்ணெயில் சமைக்காமல், தனியாக சமைத்து கொடுப்போம். உடற்பயிற்சி கூடம் அமைக்க விருப்பம் உள்ளது. அதற்கு அதிகம் செலவாகும் என்பதால் என்ன செய்வது என்று தெரியவில்லை. அரசு உதவிகள் கிடைத்தால், தொடர்ந்து போட்டிகளில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெற்றி பெறுவான்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story