வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2,520 ஆக உயர்வு
வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2,520 ஆக உயர்வு 7 வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைப்பு
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கூடுதலா 7 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு 2 ஆயிரத்து 520 வாக்குசாவடிகளுடன் வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியலை கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டார். 7 வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன.
வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல்
திருப்பூர் மாவட்ட வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ், வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியலை வெளியிட்டார்.
பின்னர் கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் 1,500 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை கொண்ட வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் 298 வாக்குச்சாவடிகள், அவினாசியில் 313 வாக்குச்சாவடிகள், காங்கயத்தில் 295 வாக்குச்சாவடிகள், திருப்பூர் தெற்கு தொகுதியில் 242 வாக்குச்சாவடிகள், உடுமலையில் 294 வாக்குச்சாவடிகள், மடத்துக்குளத்தில் 287 வாக்குச்சாவடிகள் ஏற்கனவே உள்ளன. எந்தமாற்றமும் இல்லை.
2,520 வாக்குச்சாவடிகள்
ஆனால் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் 374 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது 5 வாக்குச்சாவடிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதால் 379 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் பல்லடம் சட்டமன்ற தொகுதியில் 410 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது கூடுதலாக 2 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதால் 412 வாக்குச்சாவடிகளாக உயர்ந்துள்ளன. அதன்படி 7 வாக்குச்சாவடிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 520 வாக்குச்சாவடிகள் இடம்பெற்றுள்ளன.
மாவட்டத்தில் 22 வாக்குச்சாவடிகள் கட்டிட மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 27 வாக்குச்சாவடிகள் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 8 வாக்குச்சாவடிகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.
27-ந் தேதிக்குள்...
இதுகுறித்த ஆட்சேபனைகள், கோரிக்கைகள் இருந்தால் நேற்று முதல் வருகிற 27-ந் தேதிக்குள் அந்தந்த சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் தெரிவிக்கலாம். பின்னர் திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்களால் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் கூட்டம் நடத்தப்படும்.
இந்த கூட்டத்தில் வரப்பெற்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்களால் அனுப்பி வைக்கப்படும் கோரிக்கைகளை கலெக்டர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் கூட்டம் நடத்தப்படும். பின்னர் சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மூலமாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்து ஒப்புதல் பெறப்படும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.