ஈரோடு மாநகர் பகுதியில் பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்


ஈரோடு மாநகர் பகுதியில் பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்தது. ஆவாரம்பூ - பூலப்பூ

ஈரோடு

ஈரோடு மாநகர் பகுதியில் பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்தது.

ஆவாரம்பூ - பூலப்பூ

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையின் முந்தைய நாளான இன்று (சனிக்கிழமை) போகி பண்டிகை ஆகும். பழையன கழித்து, புதியன புகும் நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் புதியவற்றை வரவேற்கும் வகையில், வீட்டின் கூரையில் வேப்பிலை, ஆவாரம்பூ, பூலப்பூ ஆகியவற்றை சேர்த்து காப்பு கட்டுவது வழக்கம்.

இதனையொட்டி ஈரோடு மாநகரில் உள்ள பன்னீர் செல்வம் பூங்கா, பெரியமாரியம்மன் கோவில், மணிக்கூண்டு, நேதாஜி மார்க்கெட், சூரம்பட்டி நால் ரோடு, சம்பத்நகர், மேட்டூர் ரோடு, பெரியவலசு உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதியில் கிராமப்புறங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட வேப்பிலை, ஆவாரம்பூ, பூலப்பூ ஆகியைவ அடங்கிய பொங்கல் பூ காப்பு கட்ட ஏற்றவாறு சிறு சிறு கட்டுகளாக கட்டி வியாபாரிகள் ரோட்டோரம் விற்பனை செய்து வருகின்றனர்.

கரும்பு-மஞ்சள்

இதில் ஒரு கட்டு ரூ.5-க்கும், 3 கட்டுகள் ரூ.10-க்கும் விற்பனை செய்கின்றனர். இதனை ஈரோடு மாநகர் மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். மேலும் பொங்கல் அன்று புதுப்பானையில் பொங்கல் வைப்பதை தமிழர்கள் இன்றுவரை வழக்கமாக கொண்டுள்ளனர். பொங்கல் வைக்கும் போது பொங்கல் பானைக்கு அருகில் மஞ்சள் குலை, கரும்பு, பழம் உள்ளிட்ட பொருட்களையும் வைப்பார்கள். இதற்காக ஈரோடு மாநகரில் பல்வேறு பகுதிகளில் மஞ்சள் குலை மற்றும் கரும்பு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. இதை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இதேபோல் ஆர்.கே.வி. ரோட்டில் உள்ள ஜவுளிக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.


Next Story