களை கட்டிய நாட்டுக்கோழி சந்தை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேதுபாவாசத்திரம் அருகே நாட்டுக்கோழி சந்தை களை கட்டியது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேதுபாவாசத்திரம் அருகே நாட்டுக்கோழி சந்தை களை கட்டியது.
பாரம்பரிய பண்டிகை
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம். வீர, தீர, சாகசங்கள் நிறைந்த விளையாட்டு போட்டிகள், மனதை உற்சாகப்படுத்தும் கலை போட்டிகள் என பொங்கல் பண்டிகை வரும் அந்த வாரம் முழுவதும் மக்கள் உற்சாகமாக இருப்பார்கள்.
பொங்கல் பண்டிகைக்கே உரித்தான சில பொருட்கள் உண்டு. அவற்றை தமிழர்கள் பொங்கல் பண்டிகைதோறும் தவறாமல் வீட்டுக்கு வாங்கி வந்து விடுவார்கள். அந்த பொருட்களில் கரும்பு, பச்சரிசி, வெல்லம் போன்றவற்றுக்கு தனி இடம் உண்டு. அதேபோல வீட்டில் வளர்க்கப்படும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு மரியாதை செலுத்துவதையும் பொங்கல் பண்டிகை நாளில் மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
நாட்டுக்கோழி
பொங்கல் பண்டிகையையொட்டி கிராமப்புறங்களில் நாட்டுக்ே்காழி விற்பனை அமோகமாக நடக்கிறது. தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதி அதிக கிராமங்களை உள்ளடக்கிய பகுதியாகும். இந்த பகுதிகளில் வீடுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இங்குள்ள பெண்கள் அதிகம் பேர் தங்கள் வீடுகளில் சிறு தொழில் போல அதிகமாக நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகின்றனர். இந்த கோழிகளை தங்கள் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தியது போக மற்றவைகளை விற்று வருவாய் ஈட்டுகிறார்கள்.
பண்டிகை கால செலவு
தமிழ்ப்புத்தாண்டு, ஆடிப்பெருக்கு, தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் வியாபாரிகள் இந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் இருந்து நாட்டுக்கோழிகளை வாங்கி செல்கிறார்கள். அதேபோல் சில்லறை விற்பனையும் நடக்கிறது. பண்டிகை கால செலவுக்கு நாட்டுக்கோழிகள் மூலம் கிடைக்கும் வருவாயை இந்த பகுதியை சேர்ந்த இல்லத்தரசிகள் பெரிதும் நம்பி உள்ளனர். அதேபோல வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று சேதுபாவாசத்திரம் அருகே பூக்கொல்லை கடைவீதியில் நாட்டுக்கோழி சந்தை நடக்கிறது.
வியாபாரிகள்
சேதுபாவாசத்திரம் மற்றும் சுற்று வட்டாரங்களை சேர்ந்த பொதுமக்கள் கோழிகளை விற்பனை செய்யவும், வாங்குவதற்கும் பூக்கொல்லை பகுதியில் அதிகளவில் குவிந்து வருகிறார்கள். மேலும் புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் விற்பனைக்காக நாட்டுக்கோழிகளை மொத்தமாக வாங்கி சென்று விடுகிறார்கள்.
வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் நேற்று பூக்கொல்லையில் நடந்த நாட்டுக்கோழி வாரச்சந்தை களை கட்டியது. பண்டிகை காலத்தை எதிர்பார்த்து தங்கள் வீடுகளில் வளர்த்து வந்த கோழிகளை வளர்தது வந்தவர்கள் அவற்றை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த கோழிகளை வாங்குவதற்கும் ஏராளமானோர் ஆர்வத்துடன் அங்கு திரண்டிருந்தனர்.