காணும் பொங்கல் பண்டிகை:ஏற்காடு, மேட்டூர், பூலாம்பட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


காணும் பொங்கல் பண்டிகை:ஏற்காடு, மேட்டூர், பூலாம்பட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

காணும் பொங்கல் பண்டிகையையொட்டி, ஏற்காடு, மேட்டூர், பூலாம்பட்டியில் நேற்று சுற்றுலா பயணிகள் திரளாக குவிந்தனர்.

சேலம்

சேலம்,

காணும் பொங்கல்

பொங்கல் பண்டிகையின் 4-வது நாளான நேற்று காணும் பொங்கல் பண்டிகையையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற சுற்றுலாத்தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் குடும்பம் சகிதமாக வந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில், மேட்டூர் அணை பூங்காவிற்கு நேற்று காலை முதலே சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர். இங்கு சுற்றுலா பயணிகள் சிலர் மேட்டூர் காவிரி ஆற்றில் புனித நீராடி அணைக்கட்டு முனியப்ப சாமியை தரிசனம் செய்தனர். இதையடுத்து பூங்காவிற்கு சென்று இன்பமாக பொழுது போக்கினர்.

ஒரு சில பக்தர்கள், அணைக்கட்டு முனியப்பசாமிக்கு ஆடு, கோழி பலியிட்டு பொங்கல் வைத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். பின்னர் அவர்கள் தாங்கள் சமைத்த உணவை பூங்காவிற்கு எடுத்து சென்று நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அமர்ந்து உண்டு மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள் கூட்டம்

இதேபோல் சிறுவர்-சிறுமிகள் சறுக்கு விளையாட்டு, சீசா பலகை, ஊஞ்சல் போன்றவற்றில் விளையாடி இன்பமாக பொழுதை கழித்தார்கள். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததன் காரணமாக காரணமாக பூங்கா மற்றும் பவள விழா கோபுரம் ஆகிய இடங்களில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காட்சியளித்தது. இதையொட்டி மேட்டூர் போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

ஏற்காடு

காணும் பொங்கலையொட்டி, ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர். லேடிஸ் சீட், ரோஜா தோட்டம், சேர்வராயன் கோவில், அண்ணா பூங்கா, கரடியூர் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு தலங்களுக்கு குடும்பம் சகிதமாக வந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். மேலும், படகு சவாரி செய்வதற்காக ஏராளமான பயணிகள் நீண்ட வரிசையில் படகு குழாமில் காத்திருந்ததையும் காணமுடிந்தது.

நேற்று காலை, மாலை வேளையில் கடும் குளிர், குளுகுளு இதமான சூழல்நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.மேலும் இங்குள்ள கடைகளில் வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

பூலாம்பட்டி கதவணை

இதேபோல் பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதிக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர். அவர்கள் காவிரி கதவணை மற்றும் அதன் சுற்றியுள்ள இயற்கை அழகு கொஞ்சும் பகுதிகளை கண்டுரசித்தனர். மேலும் கதவணை பகுதியில் விசைப்படகு சவாரி செய்தும், அங்குள்ள நீர் மின் நிலையம் மற்றும் தடுப்பணை பகுதி, காவிரி படித்துறை, கைலாசநாதர் கோவில், காவிரித்தாய் சன்னதி, நந்திகேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து ரசித்தனர்.

மேட்டூர் அணை பூங்காவை நேற்று காணும் பொங்கல் பண்டிகையொட்டி, மொத்தம் 8 ஆயிரத்து 381 பேர் கண்டு ரசித்தனர். அவர்களிடம் இருந்து கட்டணமாக தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.41 ஆயிரத்து 905 கட்டணம் வசூலானது. இதேபோல் பவளவிழா கோபுரத்தில் ஏறி அணையின் அழகை நேற்று ஒரே நாளில் 1,270 பேர் கண்டு ரசித்தனர். அவர்களிடம் இருந்து தலா ரூ. 5 வீதம் ரூ.6 ஆயிரத்து 350 கட்டணம் வசூலானது. மொத்தத்தில் மேட்டூர் அணை பூங்கா, பவள விழா கோபுரத்தில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்த வகையில், நேற்று ஒரேநாளில் ரூ.48 ஆயிரத்து 255 கட்டணம் வசூலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story