நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு98.7 சதவீதம் வினியோகம் -அதிகாரி தகவல்


நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு98.7 சதவீதம் வினியோகம் -அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 17 Jan 2023 12:15 AM IST (Updated: 17 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு 98.7 சதவீதம் பேருக்கு வினியோகம் செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் கூறினார்.

பொங்கல் பரிசுத்தொகுப்பு

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்கள், இலங்கை தமிழர் முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், ராசிபுரம், குமாரபாளையம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை என 8 தாலுகாவில் 914 ரேஷன் கடைகளில் 5 லட்சத்து 42 ஆயிரத்து 83 ரேஷன் கார்டுகளும், பரமத்திவேலுார், சேந்தமங்கலம் மற்றும் மோகனூர் என 3 பகுதியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் 673 கார்டுகளுக்கும் என மொத்தம் 5 லட்சத்து 42 ஆயிரத்து 756 ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி கடந்த 9-ந் தேதி தொடங்கியது.

98.7 சதவீதம் வினியோகம்

அனைத்து ரேஷன் கடைகளிலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தினசரி காலை, மாலை என பிரித்து பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டது. பொதுமக்களும் ஆர்வமுடன் சென்று அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று சென்றனர். இதுவரை பெரும்பாலான ரேஷன் கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 98.7 சதவீதம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. வெளியூருக்கு வேலைக்கு சென்றவர்கள் வாங்காமல் இருப்பர். அவர்களுக்கு விரைவில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story