பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்


பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் பொங்கல் பரிசு ரூ.1000 மற்றும் கரும்பு, சர்க்கரை, அரிசி ஆகியவை நேற்று முதல் வினியோகம் செய்யப்பட்டது. இதனை பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி சென்றனர்.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் பொங்கல் பரிசு ரூ.1000 மற்றும் கரும்பு, சர்க்கரை, அரிசி ஆகியவை நேற்று முதல் வினியோகம் செய்யப்பட்டது. இதனை பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி சென்றனர்.

பொங்கல் பரிசு

பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மிகழ்ச்சியுடன் கொண்டாட அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் ஆகியவற்றை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து பொதுமக்கள் சிரமமின்றி பொங்கல் பரிசுத்தொகுப்புகளை பெற்றுச்செல்லும் வகையில் முன்கூட்டியே டோக்கன் வழங்கப்பட்டது. அந்த டோக்கனில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நாள், நேரம் உள்ளிட்டவை இடம்பெற்று இருந்தது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வினியோகம் செய்யும் பணியை சென்னையில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஆர்வத்துடன் பெற்றுச்சென்றனர்

இதைத்தொடர்ந்து கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 88 ஆயிரம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி நேற்று தொடங்கியது. கோவை பூ மார்க்கெட் அருகே தெப்பக்குள வீதியில் உள்ள ரேஷன் கடையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பொங்கல் பரிசு ரூ.1,000 மற்றும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு அடங்கிய தொகுப்பை ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர். இதேபோல் இலவச வேட்டி, சேலையும் பெற்றுச்சென்றனர். அங்கு மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதேபோல மாவட்டத்தில் உள்பட அனைத்து ரேஷன் கடைகளில் நேற்று காலை 10 மணி முதலே பொதுமக்களின் கூட்டம் அதிகளவு இருந்தது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று சென்றனர்.

தரமான பொருட்கள்

பொங்கல் பண்டிகை தொகுப்பு வழங்கும்போது ரேஷன் கடை ஊழியர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து அரசு பல்வேறு அறிவுரைகளை வெளியிட்டு இருந்தது. அதாவது பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படும் பச்சரிசியின் தரத்தில் எந்தவித சமரசமும் செய்யக்கூடாது. தூய்மையான, வெண்மை நிறம் கொண்ட சர்க்கரை மட்டுமே பொங்கல் தொகுப்பிற்கு பயன்படுத்த வேண்டும்.

6 அடி அல்லது 6 அடிக்கு மேல் உள்ள கரும்பு மட்டுமே வினியோகம் செய்ய வேண்டும். இரண்டு 500 ரூபாய் தாள்களை மட்டுமே வழங்க வேண்டும். பயனாளர்களை வேறு தேதிக்கு வாருங்கள் என சொல்லக்கூடாது என அறிவுறுத்தி இருந்தது. மேலும் வருகிற 13-ந் தேதி வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, அரசு வழங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. கரும்பு, பச்சரிசி மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்கள் நல்ல தரத்துடன் இருந்தது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


Next Story