பொங்கல் பரிசுத்தொகை ரூ.1,000: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


பொங்கல் பரிசுத்தொகை ரூ.1,000: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x

பொங்கல் பரிசுத்தொகை ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படுகிறது.

சென்னை,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

தமிழர்களின் கலாசாரம், பாரம்பரியத்தை பறைச்சாற்றும் இந்த பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.

ரொக்கப் பணம்

தொடக்கத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரை கிலோ பச்சரிசி, வெல்லம், 20 கிராம் பருப்பு, முந்திரி, திராட்சை ஆகியவை பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. அதன்பின்னர் இந்த திட்டம் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசு சார்பில் வழக்கமான பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. இது ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்டாக அமைந்தது. தேர்தலையொட்டி வழங்கப்பட்டதால் வாக்காளர்களுக்கான கவனிப்பு என்ற விமர்சனங்கள் எழுந்தது.

தி.மு.க. அரசு

சட்டமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி உதயமானது. பொங்கல் பரிசு பணம் ஏலத்தொகை போன்று ஏறி வந்திருந்த நிலையில் தி.மு.க. ஆட்சியில் என்ன பரிசு தொகுப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எகிறி இருந்தது.

ஆனால் தமிழக அரசின் நிதி மற்றும் கடன் சுமையை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சார்பில் ரொக்கப் பணம் வழங்கப்படவில்லை.

கடந்த ஆண்டு 21 பொருட்கள்

ரொக்கப் பணத்துக்குபதிலாக கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசு சார்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை, உப்பு மற்றும் மஞ்சள் பை, முழு கரும்பு என 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு மக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த தொகுப்பில் வெல்லம், பச்சரிசி போன்ற பொருட்கள் தரம் குறைந்திருந்தது. இது குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து பொங்கல் பரிசு தொகுப்பின் தரத்தை சரியாக ஆராயவில்லை என்பதற்காக தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் தமிழக அரசுக்கு கசப்பான அனுபவத்தை தந்தது.

ரேஷன் அட்டை தாரர்களின் மனக்கணக்கு

இதனால் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதிலாக ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கும் மனநிலையில் தமிழக அரசு இருப்பதாக தகவல்கள் கசிந்தன. இதையடுத்து கரும்பு விவசாயிகளும் தங்கள் கவலையை வெளிப்படுத்தி இருந்தனர். தொடர்ந்து 7 ஆண்டுகளாக பொங்கல் பரிசு தொகுப்பில் இடம் பெற்ற கரும்பை இந்த ஆண்டும் கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்திருந்தனர்.

இதற்கிடையே தமிழக அரசு சார்பில் அனைத்து வகை அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 19-ந்தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ரேஷன் அட்டைதாரர்களிடம் ஏற்பட்டது. ரொக்கப் பணம் கிடைக்குமா? பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்குமா? அல்லது இரண்டும் கிடைக்குமா? என்று மக்கள் மனக்கணக்கு போட தொடங்கினர்.

மு.க.ஸ்டாலின் உத்தரவு

இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அரிசி அட்டை தாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரையுடன் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2023-ம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அரிசி குடும்ப அட்டைதாரர்கள்

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வருகிற பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கிட முடிவு செய்யப்பட்டது.

இதன் மூலம் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு சுமார் ரூ.2 ஆயிரத்து 356.67 கோடி செலவினம் ஏற்படும்.

2-ந் தேதி முதல் வினியோகம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை வருகிற 2-ந்தேதி (திங்கட்கிழமை) சென்னையில் தொடங்கி வைப்பார். அன்றைய தினமே மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் இந்த நிகழ்வை தொடங்கி வைப்பார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2019, 2020 ஆகிய ஆண்டுகளில் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story